/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதைகள் மசோதா: விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
விதைகள் மசோதா: விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 24, 2025 06:17 AM

பல்லடம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி அறிக்கை:
மத்திய அரசு, தற்போது அமலில் இருந்து வரும் விதைகள் சட்டம், 1966ஐ நீக்குவதற்காக, புதிய விதைகள் மசோதா, 2025ஐ அறிமுகப்படுத்தி கருத்துகளை கேட்டு வருகிறது. தற்போது அமலில் உள்ள சட்டத்தில், விவசாயிகள் பாதிக்கப்பட்டால், இழப்பீடு பெறுவதற்கான அம்சங்கள் சேர்க்கப்பட வில்லை. நீண்டகாலமாகவே, தரமற்ற, போலி விதைகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் உரிய இழப்பீடு பெற முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இழப்பீடு பெறுவதற்காக நுகர்வோர் நீதிமன்றங்கள் சென்று அலைக்கழிப்புக்கு ஆளாவதுடன், கூடுதல் செலவுகளை செய்து, வழக்குகளை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியும் அடைகின்றனர். நஷ்டம் ஏற்படும் பல விவசாயிகள், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிக அளவில் நடந்துள்ளன.
எனவேதான், மத்திய அரசு கொண்டுவரவுள்ள விதை மசோதா, 2025ல், சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். புதிய மசோதாவில் விதைகள், நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் நாற்றுப் பண்ணைகளின் பதிவு உள்ளிட்ட விதைகள் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களும் கொண்டுவரப்பட்டிருந்தாலும், தரமற்ற மற்றும் போலி விதைகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் இழப்பீடு பெறும் வகையிலான அம்சங்களும் இடம்பெற வேண்டும்.

