/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலைக்கு செல்கிறோம்! தன்னம்பிக்கை பிறக்கிறது
/
வேலைக்கு செல்கிறோம்! தன்னம்பிக்கை பிறக்கிறது
UPDATED : ஆக 29, 2025 06:54 AM
ADDED : ஆக 28, 2025 11:36 PM

   குடும்ப பாரம் குறைகிறது ரஞ்சிதா, துணிக்கடை ஊழியர்: 
நான் கடந்த 9 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். சொந்தச் செலவுகளுக்கும், அவசர தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவுகிறது. பிள்ளைகளின் தேவைகளையும் நிறைவேற்ற முடிகிறது. பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதால், அந்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடிகிறது.  வீட்டிலும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். நான், கணவர் இருவரும் வேலைக்குச் செல்வதால் குடும்ப பாரம் சற்று குறைகிறது.
 சேமிக்க துவங்கியுள்ளேன் சிந்துஜா ஜெயக்குமார், டைல்ஸ் கடை ஊழியர்: 
வீட்டில் இருக்கும்போது அன்றாட தேவைகளுக்காக பிறரை சார்ந்து இருக்கக்கூடும். வேலைக்குச் செல்வதால் தன்னம்பிக்கை பிறக்கிறது. துணிச்சலாக இருக்க முடிகிறது. மூன்று ஆண்டுகளாக வேலைக்குச் செல்கிறேன்.  எனது தேவை மட்டுமல்லாமல் வீட்டுக்கும் இயன்ற அளவு உதவ முடிகிறது. பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக இயன்ற அளவு சேமிப்பு தொடங்கியுள்ளேன்.
 குடும்பம் இயங்க வேண்டுமே! லட்சுமி, பூ வியாபாரி: 
நான்  5 ஆண்டுகளாக பூக்கடை நடத்தி வருகிறேன். அன்றாட குடும்ப தேவைகளுக்காக இந்த வருமானம் பயன்படுகிறது. ஆண்கள் உழைப்பது மட்டும் வைத்து குடும்பம் இயங்க முடியாது. குடும்பம் ஓடுவதற்கு பெண்களாகிய நாங்களும் பங்காற்ற வேண்டும். இது தான் பல குடும்பங்களின் நிலை.
 பாதுகாப்பான இடம் இது கல்யாணி, உணவக ஊழியர்: 
நான் 5 ஆண்டுகளாக பணி செய்கிறேன். எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர்.
கணவர் இறந்து விட்டார். நான் தனியாகத்தான் இருக்கிறேன். என் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வேலைக்குச் செல்கிறேன். பணியிடத்திலும், திருப்பூர் மாநகரிலும் பாதுகாப்பு இருக்கிறது.
 பலவகை தேவை சாத்தியமானது அனிதா, பனியன் தொழிலாளி:
நான் 4 ஆண்டுகளாக வேலைக்குச் செல்கிறேன். வீட்டில் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.
பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கவும், என்னுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும், குடும்ப செலவிற்கும் என்று பல வகையான தேவைகளை நிறைவேற்ற முடிகிறது.
பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக 'சீட்டு' ஒன்று போடப் போகிறேன். இவை எல்லாமே நான் வேலைக்குச் செல்வதாலேயே சாத்தியமானது.

