/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ சேவை மையங்கள்; அனைத்தும் ஒரே இடத்தில் வழங்க திட்டம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ சேவை மையங்கள்; அனைத்தும் ஒரே இடத்தில் வழங்க திட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ சேவை மையங்கள்; அனைத்தும் ஒரே இடத்தில் வழங்க திட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ சேவை மையங்கள்; அனைத்தும் ஒரே இடத்தில் வழங்க திட்டம்
ADDED : செப் 02, 2025 08:13 PM
உடுமலை ; மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வகை சேவைகளையும், ஒரே இடத்தில் வழங்கும் வகையில் சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேம்படுவதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
21 வகை மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு, உலக வங்கியுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்டத்தை (ரைட்ஸ்), கடந்த 2023 முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும், வட்டார அளவில் ஓரிட சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக, இதற்கான மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 36 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
மாவட்டத்தில், பல்வேறுவகை சேவைகளை மாற்றுத்திறனாளிகள் ஒரே இடத்தில் பெறும் வகையில், 'ரைட்ஸ்' திட்டத்தில், ஒன்றியம், வருவாய் கோட்ட அளவில் என, மொத்தம் 23 ஓரிட சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. 1,500 சதுர அடி பரப்பளவிலான கட்டடத்தில், இம்மையம் அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மையத்திலும், பிசியோதெரபி, மனவளர்ச்சி குன்றியோர், செவித்திறன் பாதித்தோர், பேச்சுத்திறன் பாதித்தோருக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்றுனர்கள், மனநல ஆலோசகர்கள் பணி அமர்த்தப்படுவர்.
மாற்றுத்திறனாளிகள் தற்போது, இந்த சேவைகளுக்காக, வெவ்வேறு சிறப்பு பள்ளிகளை நாடிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஓரிட சேவை மையம் அமையும்போது, அனைத்து சேவைகளும் அருகாமையிலேயே கிடைக்கும்; மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு ஏற்பட்டு வரும் அலைச்சல் தவிர்க்கப்படும்.
ஓரிட சேவை மையத்துக்கான இடம் தேர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும், ஆரம்ப சுகாதார மையங்களுக்கு அருகிலேயே இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை 20 மையங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் இம்மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும், என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.