ADDED : செப் 29, 2025 12:31 AM

திருப்பூர்; வரும் அக்., 1ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை விழா களைகட்டப்போகிறது; 20 ம் தேதி, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருப்பூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள், தீபாவளி பண்டிகையை, போனஸ் வாங்கி கொண்டாடி வருகின்றனர்.
போனஸ் பட்டுவாடா துவங்கும் முன்னதாகவே, சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள், திருப்பூரில் முழு வீச்சில் தீபாவளி பர்ச்சேஸ் துவக்கிவிட்டனர். தீபாவளி பண்டிகைக்கு முன், இரண்டே ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இருக்கிறது; கடைசி நேரத்தில், கூட்டத்தில் முண்டியக்க முடியாது என்பதால், நேற்றே, ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கும் கடைகளில், கூட்டம் குறையவே இல்லை.
இருப்பினும், நேற்று மதியம் வெயில் காரணமாக கூட்டம் குறைந்திருந்தது; மாலை துவங்கி இரவு வரை, கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக்கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது; பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடைகள், 'மொபைல்' போன் கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகம் இருந்தது. காதர்பேட்டையில், இன்னும் தீபாவளி பண்டிகைகால விற்பனை சூடுபிடிக்கவில்லை. அடுத்த வாரங்களில் வேகமெடுக்கும் என, மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.