/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தையில் கடைகள் கட்டுமான பணி நிறுத்தம் சட்ட விரோத செயல்கள் அரங்கேறும் அவலம்
/
சந்தையில் கடைகள் கட்டுமான பணி நிறுத்தம் சட்ட விரோத செயல்கள் அரங்கேறும் அவலம்
சந்தையில் கடைகள் கட்டுமான பணி நிறுத்தம் சட்ட விரோத செயல்கள் அரங்கேறும் அவலம்
சந்தையில் கடைகள் கட்டுமான பணி நிறுத்தம் சட்ட விரோத செயல்கள் அரங்கேறும் அவலம்
ADDED : டிச 31, 2024 05:18 AM

உடுமலை, : உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில், புதிய கடைகள் கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், புதர் மண்டி காணப்படுவதோடு, சமூக விரோத செயல்கள் நடக்கும் மையமாகவும் மாறியுள்ளது.
உடுமலை நகராட்சி, சந்தை வளாகம், 6.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 34 கமிஷன் கடைகள் மற்றும் 314 நிரந்தர கடைகள் உள்ளன. உடுமலை சுற்றுப்பகுதிகளில் விளையும், தக்காளி, தேங்காய், வெங்காயம், முருங்கை, கத்தரி, வெண்டை என தினமும், 700 டன் வரை காய்கறிகள் வரத்து வருகிறது.
உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம், மறையூர், மூணாறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து, காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர்.
மேலும், இங்கு செயல்படும் தினசரி சந்தையில், காய்கறி வாங்க, பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.
சந்தை வளாகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், தினசரி சந்தை வளாகத்தில், தரைக்கடைகளில் அமர்ந்து, வியாபாரிகள் விற்பனை செய்வதை தவிர்க்கும் வகையில், இடித்து விழும் நிலையிலுள்ள பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு, புதிய கடைகள் அமைக்கவும் வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
நிதி ஒதுக்கீடு
இந்நிலையில், கடந்த, 4 ஆண்டுக்கு முன், நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், 6.84 கோடி ரூபாய் செலவில், சந்தை வளாகத்தில், 70 கடைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், கடைகள் கட்டுமான பணிக்கு, சந்தை வளாகத்தில் ஒதுக்குப்புறமான பகுதி தேர்வு செய்யப்பட்டு, கடைகள் கட்டும் பணி துவங்கியது. ஒரு பகுதியில் கட்டப்பட்ட கடைகளுக்கு, ெஷட்டர் உள்ளிட்டவை அமைக்கவில்லை.
ஒரு புறம், கடைகள் கட்டுமானத்திற்கான பில்லர்கள் மட்டும் அமைக்கப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், கடைகள் கட்டிய பகுதி, புதர் மண்டி காணப்படுகிறது. மது அருந்தும் மையமாகவும் ,கஞ்சா உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கும் மையமாகவும் மாறியுள்ளது.
இரு நாட்களுக்கு முன், சந்தையில் பயன்படுத்தாமல், கடைகள் கட்டும் கிழக்கு பகுதி காம்பவுண்ட் சுவர் ஏறி வந்த திருடர்கள், அருகிலுள்ள மொத்த விற்பனை கடை கூரையை உடைத்து, 3.5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர்.
சந்தைக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், கிழக்கு பகுதி பயன்படுத்தாமலும், சமூக விரோத செயல்கள் நடக்கும் மையமாகவும் மாறியுள்ளதால், பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை, இறக்கி வைத்து விற்பனை செய்ய முடியாமலும், வாகனங்கள் உள்ளே வர முடியாத நிலை என போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
எனவே, சந்தை வளாகத்தில் கடைகள் கட்டுமான பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.