/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளருக்கு வெள்ளி நாணயம் பரிசு
/
துாய்மை பணியாளருக்கு வெள்ளி நாணயம் பரிசு
ADDED : ஆக 26, 2025 11:02 PM

திருப்பூர்; திருப்பூர் குமரன் காலனி யில் உள்ள வீடுகளில் இருந்து குப்பையை தரம் பிரித்து வாங்கும் பணியை நேர்த்தியாக செய்து வரும் துாய்மை பணியாளருக்கு, வெள்ளி நாணயம் பரிசு வழங்கப்பட்டது.
திருப்பூர் குமரன் காலனியில், 'ட்ரீம் - 20' பசுமை அமைப்பினர், நெகிழி இல்லா திருப்பூர் திட்டத்தின் கீழ்,'நம் குப்பை - நம் பொறுப்பு' என்ற அடிப்படையில், மக்களிடம் குப்பையை பிரித்து வழங்கும் நடைமுறையை வலியுறுத்தி, செயல்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, ஓரிரு வீடுகளை தவிர, பெரும்பாலான வீடுகளைச் சேர்ந்த இல்லத்தரசிகள், தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பையை, மக்கும் மற்றும் மக்காத குப்பையாக பிரித்து, வீடு தேடி வரும் துாய்மை பணியாளரிடம் வழங்குகின்றனர். அவர்களும் அதை தரம் பிரிக்கப்பட்ட நிலையிலேயே வாங்கிச் செல்கின்றனர்.
இதில், பழனியம்மாள் என்கிற துாய்மை பணியாளர் மக்கள் தரம் பிரித்தோ, அல்லது தரம் பிரிக்காமலோ குப்பையை வழங்கினால், மீண்டும் அவர் அந்த குப்பையை சரி பார்த்து, மக்கும் மற்றும் மக்காத குப்பையை மிக சரியாக, நேர்த்தியாக தரம் பிரித்து, சேகரித்துக் கொள்கிறார்.
அவரது பணியை பாராட்டி, அவரை ஊக்குவிக்கும் வகையில், காய்கறி தொகுப்பு பரிசு வழங்கிய, 'ட்ரீம் 20' பசுமை அமைப்பினர், நேற்று வெள்ளி நாணயம் பரிசு வழங்கி ஊக்குவித்தனர்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி, 2ம் மண்டல தலைவர் கோவிந்தராஜ், 'ட்ரீம் - 20' பசுமை அமைப்பினர் மற்றும் திருப்பூர் ரோட்டரி மெட்டல் டவுன் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.