/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடக்கழிவு மேலாண் திட்டம் கட்டமைப்பு முக்கியம்
/
திடக்கழிவு மேலாண் திட்டம் கட்டமைப்பு முக்கியம்
ADDED : ஏப் 10, 2025 11:43 PM
திருப்பூர்; விரல் விட்டு எண்ணக்கூடிய உள்ளாட்சிகளில் மட்டுமே திடக்கழிவு மேலாண் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. 90 சதவீத உள்ளாட்சிகளில் இத்திட்டத்தின் செயல்பாடு வெற்றி பெறவில்லை.
மத்திய அரசு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் புதிய கொள்கையை வகுத்திருக் கிறது. அதன்படி, இதுவரை நடைமுறையில் உள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பையுடன், ஈரக்கழிவுகள், காய்ந்தகழிவுகள், சுகாதார கழிவுகள் என, கூடுதலாக சில பிரிவுகளின் கீழ், குப்பையை தனியாக தரம் பிரிக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை ஆலோசகர் டாக்டர் வீரபத்மன் கூறியதாவது:
மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் வரவேற்க கூடியது. 100 கிலோவுக்கு மேல் குப்பையை உருவாக்கும் நிறுவனங்கள், 'பல்க் ஜெனரேட்டர்' என்ற வகையில் அவர்களே அவற்றை அகற்றுவது தொடர்பான வழிகாட்டுதல் வாயிலாக, பொது இடங்களில் அதிகளவில் குப்பைகொட்டப்படுவது தவிர்க்கப்படும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தனியாரை அனுமதிப்பதன் வாயிலாக, திட்டத்தை திறம்பட செயலாற்ற முடியும்.
இருப்பினும், இத்திட்டம் திறம்பட செயல்பட, உள்ளாட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்பு அவசியம். அந்தந்த ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தலைவர்கள், உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பு அவசியம்.
உள்ளாட்சி நிர்வாகத்தினரும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ஈடுபடும் தனியார் நிறுவனத்தினரும் இணைந்து பணியாற்றுவது அவசியம். ஒவ்வொரு வீடுகளில் வசிப்போரும், குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்.
இதுபோன்ற ஒரு கட்டமைப்பை மாநில அரசு கட்டாயமாக்குவதன் வாயிலாக, திட்டம்வெற்றி பெறும்.

