முப்பெரும் விழாவுக்கு அழைப்பு
திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் சாமிநாதன், தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க., சார்பில் ஆண்டுதோறும் அண்ணாதுரை பிறந்த நாள் மற்றும் தி.மு.க., துவக்க நாள் உட்பட முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் நடப்பாண்டில் இன்று (17ம் தேதி) கரூரில் முப்பெரும் விழாவும், விருதுகள் வழங்கும் விழா நடக்கிறது. மாவட்டத்துக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதில் திரளாக பங்கேற்க வேண்டும்,' என்று கூறியுள்ளனர்.
ரோட்டரி சங்கம் தாராளம்
திருப்பூர் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில், காங்கயம்பாளையம் புதுார் மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கு மாணவர்கள் அமர இருக்கை, டெஸ்க் ஆகியன வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இப்பள்ளியில் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்கள் இருக்கை இல்லாமல் தரையில் அமர்ந்து பயிலும் நிலை இருந்தது. இதனையடுத்து அவர்களுக்கு தேவையான இருக்கை மற்றும் மேஜைகள் வழங்கப்பட்டது. சங்க தலைவர் செந்தில், செயலாளர் முத்து, பொருளாளர் சந்திரகாந்தன் மற்றும் நிர்வாகிகள் இதனை வழங்கினர். வார்டு கவுன்சிலர் பெனாசீர், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கனிமொழிக்கு வாழ்த்து
திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலார் செல்வராஜ் தலைமை வகித்தார். தெற்கு நகர செயலாளர் நாகராஜ், மகளிர் அணி நிர்வாகிகள், கலைச்செல்வி, மாலதி, மலர் மரகதம், ஆனந்தி, நந்தினி முன்னிலை வகித்தனர். இன்று கரூரில் நடைபெறும் கட்சியின் முப்பெரும் விழாவில் திரளாக பங்கேற்பது, விருது பெற தேர்வு செய்யப்பட்ட எம்.பி., கனிமொழிக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீதிபதி திடீர் இடமாற்றம்
திருப்பூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஆறு நீதிபதிகளை இடமாற்றம் செய்து, சென்னை ஐகோர்ட் பதிவாளர் அல்லி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றும் விக்னேஷ்மாது, கோவை, 4வது கூடுதல் சார்பு நீதிபதியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, கோவை, 3வது கூடுதல் சார்பு நீதிபதி சந்தோஷ் இங்கு நியமிக்கப்பட்டார்.
பில்டர்ஸ் கிளப் மகாசபை
திருப்பூர் பில்டர் கிளப்பின் 11 வது மகாசபை கூட்டம் கணியான் பூண்டி சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சங்க தலைவர் பெர்னார்டு, தலைமை வகித்தார். செயலாளர் ராஜராஜன், முன்னிலை வகித்தார். பொருளாளர் அரவிந்த் வரவேற்றார். கூட்டத்தில், பதவிக்காலம் இரண்டு ஆண்டு என்று இருப்பதை ஒரு ஆண்டாக திருத்துவது, சங்கத்திற்கு அதிக உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அண்ணாதுரை பிறந்தநாள்
திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா, அருள்புரம் தண்ணீர் பந்தல் பகுதியில் நடந்தது. மாநில இளைஞரணி துணை செயலாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து, திருச்சியில் நடக்கும் ம.தி.மு.க. மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, நிர்வாகிகள், தொண்டர்கள் திருச்சி புறப்பட்டு சென்றனர். கட்சி நிர்வாகிகள் ஆனந்தன், மகேஸ்வரன், நந்தகோபால், குமார், ஜான், கவுரி உள்ளிட்ட பலரும் பிறந்தநாளில் பங்கேற்றனர்.
அறுந்து விழும் மின் கம்பி
பொங்கலுார் ஒன்றியம், நாச்சிபாளையம் ஊராட்சி ரங்கபாளையம் முதல் ராமலிங்கபுரம் வரை செல்லும் தார் ரோடு உள்ளது. அதன் மறுபகுதியில் வரிசையாக கூலித் தொழிலாளர்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு மின் இணைப்பு பெற்றுள்ளனர். அந்த ரோட்டை தார் ரோடு ஆக மாற்றிய பொழுது ரோட்டின் உயரம் அதிகரித்தது. இதனால், மின் கம்பிகள் தாழ்வான உயரத்துக்கு வந்துவிட்டது. அந்த வழியாக சரக்கு வாகனங்கள் செல்லும் பொழுது வீடுகளுக்கு செல்லும் மின் கம்பி அடிக்கடி அறுந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொங்கலுார் ஒன்றியம், நாச்சிபாளையம் ஊராட்சி ரங்கபாளையம் முதல் ராமலிங்கபுரம் வரை செல்லும் தார் ரோடு உள்ளது. அதன் மறுபகுதியில் வரிசையாக கூலித் தொழிலாளர்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு மின் இணைப்பு பெற்றுள்ளனர். அந்த ரோட்டை தார் ரோடு ஆக மாற்றிய பொழுது ரோட்டின் உயரம் அதிகரித்தது. இதனால், மின் கம்பிகள் தாழ்வான உயரத்துக்கு வந்துவிட்டது. அந்த வழியாக சரக்கு வாகனங்கள் செல்லும் பொழுது வீடுகளுக்கு செல்லும் மின் கம்பி அடிக்கடி அறுந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.