ADDED : செப் 18, 2025 11:26 PM

தேங்காய் பருப்பு ஏலம்
வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், 99 பேர், 35 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதில், முதல் தரம் ஒரு கிலோ, 237.39 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 166.49 ரூபாய்க்கும் விற்றது. ஏலத்தில், மொத்தம், 75 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சாக்கடை கழிவுநீர் அகற்றம்
திருப்பூர், பி.என். ரோடு, கணக்கம்பாளையம் பிரிவு, பொங்குபாளையம் ரோடு, சிட்கோ கேட் எதிரில் உள்ள வளைவில் ரோட்டில் சாக்கடை நீர் வழிந்து ஓடியது. 10 நாட்களாக மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், கடந்த 14ம் தேதி 'தினமலர்' திருப்பூர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையறிந்த மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், சாக்கடை நீர் வழிந்தோடுவதை தடுத்து சீரமைத்தனர்.
சமூக நீதிநாள் உறுதிமொழியேற்பு
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமை வகித்தார். அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்று, 'சமூக நீதியை அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்க உறுதிமொழி ஏற்கிறேன்,' என கூறி, சமூக நீதிநாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மகாராஜ், ஜெயராமன் மற்றும் பல அலுவலர்கள் பங்கேற்றனர்.
குழாய் உடைந்து குடிநீர் விரயம்
திருப்பூர், சிறுபூலுவப்பட்டியில் இருந்து காவிலிபாளையம் செல்லும் சாலையில், சில தினங்களாக குடிநீர் குழாய் உடைந்து, 4 அடி ஆழத்துக்கு குழி ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் நிலையுள்ளது. எனவே, மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக, குழாய் உடைப்பை சீரமைத்து, குடிநீர் விரயமாவதை தடுக்க வேண்டும்.