/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் திட்டங்கள் ஒருங்கிணைப்பு
/
கிராம வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் திட்டங்கள் ஒருங்கிணைப்பு
கிராம வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் திட்டங்கள் ஒருங்கிணைப்பு
கிராம வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் திட்டங்கள் ஒருங்கிணைப்பு
ADDED : ஜன 24, 2026 04:58 AM
உடுமலை: கிராமங்களின் வளர்ச்சி திட்டத்தை, ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள, 5 திட்டங்களை ஒருங்கிணைத்து, முழுமையான செயல்திட்டமாக தயாரித்து, கிராம சபையில், தீர்மானம் நிறைவேற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்திலுள்ள ஊராட்சிகளில், குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த வழிகாட்டுதல்களை அரசு ஊரக வளர்ச்சித்துறைக்கு வழங்கியுள்ளது.
அதில், கிராம ஊராட்சிகளுக்கான வளர்ச்சி திட்டத்தை, முழுமையான செயல்திட்டமாக தயாரித்து, கிராம சபையில், தீர்மானம் நிறைவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கிராம வறுமை குறைப்பு திட்டம்; நிறைவான சுகாதாரத்திட்டம்; நிறைவான குடிநீர் திட்டம்; அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பு திட்டம்; கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு மற்றும் கிராம வளர்ச்சி திட்டத்தை கொண்டு வர, மக்கள் திட்டமிடல் இயக்கத்தை செயல்படுத்தி, இரண்டு சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும்.
பிறதுறைகளின் முன்களப்பணியாளர்கள், கிராம வளர்ச்சி திட்டம் தயாரிப்பதில், முக்கிய பங்குதாரர்களாக இருப்பதால், இரண்டு கிராம சபை கூட்டங்களிலும் அவர்கள் பங்கேற்க வேண்டும்.
முன்களப்பணியாளர்கள், தங்கள் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வளங்கள், ஒருங்கிணைப்பு வழிமுறைகள் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் வாயிலாக அனைத்து துறையின் திட்டங்களை கிராம வளர்ச்சித் திட்டமாக மாற்ற இயலும்.
கிராமத்தின் அனைத்து மக்களும் பங்கேற்புடன் கூடிய, விரிவான ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்தினை தயாரிக்க வேண்டும். அக்கிராமத்தின் இலக்குகளை முழுமையாக அடைய அனைத்து துறைகளின் திட்டங்களை உள்ளடக்கி, 'கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம்' தயாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், வரும் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றவும், மக்கள் திட்டமிடல் இயக்கத்துக்கு சிறப்பு கூட்டங்கள் நடத்தவும், ஊரக வளர்ச்சித்துறையினர் தயாராகி வருகின்றனர்.
கிராம வளர்ச்சிக்கு ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன; அவை முழுமை அடையாமல் உள்ள நிலையில், மீண்டும் செயல்திட்டம் மற்றும் மக்கள் திட்டமிடல் இயக்கம் என பல்வேறு வழிகாட்டுதல்களை அரசு வழங்கியுள்ளது. தற்போதைய வழிகாட்டுதல்கள் மட்டுமாவது செயல்பாட்டுக்கு வர வேண்டும்.

