/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு பஸ் இயக்கம் ஏற்பாடுகள் தீவிரம்
/
சிறப்பு பஸ் இயக்கம் ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜன 12, 2025 02:19 AM
திருப்பூர்: வரும், 14ம் தேதி, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சிறப்பு பஸ் இயக்கம், 10ம் தேதி இரவு சென்னைக்கு துவங்கியது. ஆனால், எதிர்பார்த்த கூட்டமில்லை. நேற்று காலை முதல் இரவு வரை சிறப்பு பஸ்கள் பஸ் ஸ்டாண்ட்டில் காத்திருந்தன; பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இன்று இரவு, நாளை தான் அதிகளவில் பயணிகள் சொந்த மாவட்டங்களுக்கு பயணமாவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், முன்னெச்சரிக்கையாக கோவில்வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் போலீசார் நேற்று காலை முதல் பாதுகாப்பு பணியை துவக்கினர். மாநகராட்சி மூலம் பஸ் பயணிகள் நின்று பஸ் ஏற ஏதுவாக, மரத்தடுப்புகள் கட்டப்பட்டிருந்தது. நேற்று கூட்டம் குறைவு என்பதால், வந்தவர்கள் அப்படியே பஸ்சில் ஏறி பயணித்தனர்; மரத் தடுப்புகளுக்குள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை.
வழக்கமாக பண்டிகை நாட்களில் பயணிக்க பொதுமக்கள் முன்பதிவு ஓரளவு இருக்கும். ஆனால், நேற்றுமுன்தினம், நேற்று பெரிய அளவில் முன்பதிவும் இல்லை. இன்று முன்பதிவு செய்து, நாளை, நாளை மறுதினம் வேண்டுமானால், பயணிக்க பயணிகள் தயாராவர்கள் என எதிர்பார்க்கலாம் என்கின்றனர், போக்குவரத்து கழக அதிகாரிகள்.

