/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயல்புக்கு திரும்பியது சிறப்பு பஸ் இயக்கம்
/
இயல்புக்கு திரும்பியது சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : நவ 15, 2024 11:11 PM
திருப்பூர்; தீபாவளி பண்டிகைக்கு அடுத்த வாரம் என்பதால், கடந்த வாரம் வாராந்திர சிறப்பு பஸ் இயக்கம் குறைக்கப்பட்டது. நடப்பு வாரம் முகூர்த்த தினத்துடன் வருவதால், சிறப்பு பஸ் இயக்கம் இயல்புக்கு திரும்பியுள்ளது.
வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பஸ்கள் திருப்பூரில் இருந்து இயக்கப்படுகிறது. தீபாவளி முடிந்த மறுவாரம் என்பதால், கடந்த, 9 மற்றும், 10ம் தேதி வாராந்திர சிறப்பு பஸ் எண்ணிக்கை, 30 ஆக குறைக்கப்பட்டது.
நடப்பு வாரம் வரும், 17ம் தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால்,இன்றும், நாளையும், 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவில்வழி, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தலா, 15 பஸ்களும், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பத்து பஸ்களும் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு இல்லாதது ஏன்?
இன்று, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம். வழக்கமாக பவுர்ணமி நாட்களில் கூட திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டு இயக்கும் நிலையில், நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கம் எதிர்பார்த்த அளவில் இல்லை.
பெரும்பாலான பயணிகள் சேலம் சென்று அங்கிருந்து, திருவண்ணாமலைக்கு வேறு பஸ்சில் சென்று, கிரிவலம் வந்து, அண்ணாமலையாரை தரிசிக்க சென்றனர்.
விசேஷ நாட்களில் சிறப்பு பஸ் இயக்கம் குறித்த விரிவான அறிவிப்புகளை முன்கூட்டியே போக்குவரத்து கழகம் வெளியிட வேண்டும். அறிவிப்பு பலகைகளை பஸ் ஸ்டாண்டில் வைக்க வேண்டும் என்பது பயணிகள் பலரின் எதிர்பார்ப்பு.