/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆதார்' சார்ந்த சேவைகளுக்கு அலைக்கழிப்பு: கூடுதல் மையம் அமைத்தால் சிறப்பு
/
'ஆதார்' சார்ந்த சேவைகளுக்கு அலைக்கழிப்பு: கூடுதல் மையம் அமைத்தால் சிறப்பு
'ஆதார்' சார்ந்த சேவைகளுக்கு அலைக்கழிப்பு: கூடுதல் மையம் அமைத்தால் சிறப்பு
'ஆதார்' சார்ந்த சேவைகளுக்கு அலைக்கழிப்பு: கூடுதல் மையம் அமைத்தால் சிறப்பு
ADDED : பிப் 16, 2024 12:18 AM

உடுமலை;ஆதார் அடையாள அட்டை சார்ந்த சேவைகள், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தாலுகா அலுவலக மையத்திலும் பணியாளர் பற்றாக்குறை இருப்பதால், மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை தாலுகாவில், 5 உள்வட்டங்களும், 75 வருவாய் கிராமங்களும் உள்ளன. இங்கு வசிக்கும், பல ஆயிரம் மக்கள், ஆதார் அடையாள அட்டை சார்ந்த சேவைகளுக்கு உடுமலை நகரிலுள்ள, சேவை மையங்களை மட்டுமே நம்பியுள்ளனர்.
அதன்படி, உடுமலை தாலுகா அலுவலகத்திலுள்ள, இ - சேவை மையத்துக்கு ஆதார் திருத்தம் உள்ளிட்ட சேவைகளுக்காக வருவபர்கள் எண்ணிக்கை அதிகளவு உள்ளது.
இம்மையத்தில், போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில், சிறப்பு முகாம்கள் நடத்த அங்குள்ள பணியாளர்களை வேறு பகுதிக்கு அனுப்புகின்றனர். அப்போது, தாலுகா அலுவலகத்தில், ஆதார் சார்ந்த சேவைகள் அனைத்தும் முடங்கி விடுகிறது.
இதனால், பல்வேறு கிராமங்களில் இருந்து, காலை முதலே காத்திருக்கும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
இந்த சேவை மையத்துக்கு மாற்றாக, காந்திநகரிலுள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், ஆதார் அட்டை புதுப்பித்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அனுமதி புதுப்பிக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், ஆதார் சார்ந்த சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நகரில், நகராட்சி அலுவலகம், தலைமை தபால் நிலையம் மற்றும் வங்கி சேவை மையம் என குறைந்த இடங்களில் மட்டுமே, ஆதார் சார்ந்த சேவைகள் வழங்கப்படுகிறது.
பல்வேறு மானிய திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு, ஆதார் அடையாள அட்டை இணைக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே அட்டை பெற்றிருந்தாலும், திருத்தங்களும், புதுப்பித்தலையும் குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாததால், கிராமப்புற மக்கள், இச்சேவைகளுக்காக பல நாட்கள் அலைய வேண்டியுள்ளது.
எனவே, இப்பிரச்னைக்கு தீர்வாக, ஆதார் சார்ந்த சேவைகளை வழங்கும் சேவை மையங்களை அதிகரிக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தற்போதுள்ள சேவை மையங்களில், குறைந்த நபர்களுக்கு மட்டும் திருத்தம் மேற்கொள்ளும் முறை பின்பற்றப்படுகிறது. கூடுதல் பணியாளர்கள், தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால், அதிகளவு மக்கள் பயன்பெறுவார்கள்.