தீபாவளி தீக்காய விபத்து தயார் நிலையில் சிறப்பு வார்டு
தீபாவளி தீக்காய விபத்து தயார் நிலையில் சிறப்பு வார்டு
UPDATED : நவ 05, 2026 11:55 PM
ADDED : நவ 04, 2026 07:45 PM
திருப்பூர்: வரும் 8-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், நவ. 6, 7, 8 ஆகிய மூன்று நாட்களும் இந்த வார்டு செயல்படும். அவசர சிகிச்சைக்காக பிரத்யேக ஐ.சி.யு. வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டில் பணியாற்ற 12 டாக்டர்கள், 30 செவிலியர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றுவர்.
தீபாவளியை முன்னிட்டு, வெளியூர் செல்வோர், சொந்த ஊர் திரும்புவோர் என வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் என்பதால், விபத்து மீட்பு மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவினரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் வழக்கம்போல் ஆறு 108 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கவனம் தேவை
இது குறித்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ‘டீன்’ மனோன்மணி கூறியதாவது:
குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கண்காணிப்பில் பட்டாசு வெடிக்க வேண்டும். பருத்தி ஆடைகள், காலணிகள் அணிந்து பட்டாசு வெடிப்பது நல்லது. நீண்ட, தளர்வான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளைக் கையில் எடுக்கக் கூடாது. அவற்றின் மீது தண்ணீர் ஊற்றிவிட வேண்டும்.
பட்டாசுகளை தனித்தனியாக வெடிக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக அந்தப் பகுதியில் தண்ணீர் ஊற்ற வேண்டும். சுத்தமான துணியால் காயத்தை மூடி, பாதிக்கப்பட்ட உறுப்பை உயர்த்தி வைக்க வேண்டும். காயத்தின் மீது மை, எண்ணெய், பசை, பனிக்கட்டி, மஞ்சள் துாள் போன்றவற்றைப் பூசக்கூடாது. வலி அதிகமாக இருந்தாலோ, காயம் தீவிரமாக இருந்தாலோ உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். தீபாவளி நாட்களில் எந்நேரமும் மருத்துவ உதவி அளிக்க மருத்துவமனைக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
