/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீஅய்யப்பன் கோவில் கொடியேற்றம் கோலாகலம்
/
ஸ்ரீஅய்யப்பன் கோவில் கொடியேற்றம் கோலாகலம்
ADDED : டிச 08, 2025 05:29 AM
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், மண்டல பூஜை விழா, நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
திருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம், மண்டல பூஜை விழா நடத்தப்படுகிறது. அதன்படி, 66 வது ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவில் வளாகம், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலையில், அய்யப்ப சுவாமி சிறப்பு வழிபாட்டுடன், கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. சபரிமலை பிரதம அர்ச்சகர் ஸ்ரீகண்டரு மோகனரு தந்திரி தலைமை தாங்கினார்.
ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள், பக்தர்கள் 'சுவாமியே சரணம் அய்யப்பா' என்று கோஷமிட்டு வழிபட்டனர். தினமும் மகா கணபதி ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறும். பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் பறையெடுப்பும் மாலையில் நடக்க உள்ளது.
வரும் 12ம் தேதி அய்யப்ப சுவாமிக்கு பவானி கூடுதுறையில் ஆராட்டு உற்சவம் நடைபெறும். காவிரி நதியில் ஆராட்டும், தொடர்ந்து மகா அபிேஷகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கும்.
திருப்பூர் திரும்பும் அய்யப்ப சுவாமி, விஸ்வேஸ்வரர் கோவிலில் இருந்து, சிறப்பு அலங்காரத்துடன் தேரில் பவனியை துவக்குவார். முக்கிய வீதிகள் வழியாக, கலை நிகழ்ச்சி, வாண வேடிக்கை, கேரள செண்டை மேளதாளத்துடன் ஊர்வலம் கோவிலை சென்றடையும்.
விழா ஏற்பாடுகளை, ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஅய்யப்ப பக்த ஜனசங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

