/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் புறக்கணிப்பு! 'பேட்ச் ஒர்க்' மட்டுமே நடப்பதால் அதிருப்தி
/
மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் புறக்கணிப்பு! 'பேட்ச் ஒர்க்' மட்டுமே நடப்பதால் அதிருப்தி
மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் புறக்கணிப்பு! 'பேட்ச் ஒர்க்' மட்டுமே நடப்பதால் அதிருப்தி
மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் புறக்கணிப்பு! 'பேட்ச் ஒர்க்' மட்டுமே நடப்பதால் அதிருப்தி
ADDED : செப் 07, 2025 09:19 PM

உடுமலை; உடுமலை-பல்லடம், பொள்ளாச்சி-தாராபுரம் உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெறாமல், 'பேட்ச் ஒர்க்' மட்டுமே நடக்கிறது. போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பல்லாங்குழியான நெடுஞ்சாலைகளில், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலை, 48 கி.மீ., தொலைவுடையதாகும். மாவட்ட தலைநகரான திருப்பூருக்கு செல்ல, இவ்வழித்தடமே பிரதானமாக உள்ளது. அதிகளவு தொழிற்சாலைகள் இவ்வழித்தடத்தில் அமைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, 2010-11ல், பல்லடம் வரை இடைவழித்தடமாக இருந்த பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. பெரியபட்டி அருகே, உப்பாறு ஓடையில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது. அதன்பின் எவ்வித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளவில்லை.
உடுமலையில் இருந்து பல்லடம் வரை பின்னலாடை சார்ந்த தொழிற்சாலைகளும், புதிய குடியிருப்புகளும் அதிகரித்து கொண்டே உள்ளது. அதற்கேற்ப வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.
ஆனால், அதற்கேற்ப இந்த நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படாததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. பருவமழைக்கு பின், உடுமலையில் இருந்து பெரியபட்டி வரை பல இடங்கள் உருக்குலைந்து, குண்டும், குழியுமாக மாறி, இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறையினர் 'பேட்ச் ஒர்க்' செய்தாலும், பழைய ஓடுதளத்தை விட மேடாக உள்ளது. இதனல், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கின்றனர். குறுகலான ரோட்டில், விலகி செல்ல முடியாமல் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.
இந்த ரோட்டை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தவும், குடிமங்கலம் உள்ளிட்ட சந்திப்புகளை மேம்படுத்தவும், நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால், 'சர்வே' செய்யப்பட்டது. அதன்பின் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதே போல், பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, தமிழக-கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரோடாக உள்ளது. கரூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு, அதிகளவு கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் செல்கின்றன.
இனி 'பேட்ச் ஒர்க்' செய்ய முடியாத அளவுக்கு, ரோடு முழுக்க ஒட்டு வேலை மட்டும் செய்யப்பட்டு, புதுப்பிக்கப்படாமல் உள்ளது.
இவ்வாறு, முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரு நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்கு, தி.மு.க., ஆட்சிக்காலத்தில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், புறக்கணிக்கப்படுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.