ADDED : நவ 02, 2025 03:23 AM
பொங்கலுார்: கால்நடைகளுக்கு உலர் தீவனம், பசுந்தீவனம், அடர் தீவனம் என சமச்சீர் தீவனங்களை கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை ஆரோக்கியமாக இருக்கும். பால் உற்பத்தி அதிகரிக்கும்.
சோளத்தட்டில் சத்து அதிகம் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் உலர் தீவனத்திற்காக சோள தட்டை பயன்படுத்தி வருகின்றனர். தட்டு கிடைக்காத போது வைக்கோலை பயன்படுத்துகின்றனர்.
கடந்தாண்டு போதிய மழை இன்மையால் சோளத்தட்டு வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பருவமழையும் போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் பசுந்தீவன பற்றாக்குறை நீடிக்கிறது. எனவே, வேறு வழி இன்றி விவசாயிகள் வைக்கோலை பயன்படுத்தி வருகின்றனர். சீசன் காலத்தில் ஒரு கட்டு, 200 ரூபாய்க்கு கிடைத்தது. கோடை மழை பொய்த்துப் போனதால் கடந்த மாதம் ஒரு கட்டு, 250 முதல், 280 ரூபாய் வரை விலை போனது.
வைக்கோலுக்கான தேவை குறையாதது, நெல் விளையும் பகுதிகளில் அதிக மழைப்பொழிவால் பயிர்கள் அழிந்து வருவது போன்ற காரணங்களால் ஒரு கட்டு, 300 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கால்நடை விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விவசாயிகள் சிலர் கூறுகையில், 'போதுமான மழை பெய்திருந்தால் பசுந்தீவன வளர்ச்சி அதிகரித்து, வைக்கோலுக்கான தேவை குறைந்திருக்கும். இதனால், விலை சரிவு ஏற்பட்டிருக்கும். இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக உள்ளது,' என்றனர்.

