/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆலோசனை கூட்டம்
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 02, 2025 03:23 AM

திருப்பூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணி குறித்து கட்சியினருக்கு விளக்கும் வகையில் பயிற்சி முகாம் நடந்தது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
இதனையடுத்து, தலைமை தேர்தல் கமிஷன், தமிழகத்தில் உள்ள சட்டசபை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலில் சிறப்பு சீர்திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் கமிஷன், அனைத்து மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு இதற்கான அறிவுரைகளை வழங்கியது.
தொடர்ந்து, அடுத்த கட்டமாக, மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப்பணியின் நோக்கம், நடைமுறைகள், படிவங்கள் வினியோகித்தல் மற்றும் பூர்த்தி செய்து பெறுதல் ஆகியன குறித்து விளக்கப்பட்டது.
மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது, ஆட்சேபனை இருப்பின் அதன் மீதான நடவடிக்கை உள்ளிட்ட விவரங்களும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது வரை அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டது.
இதனையடுத்து தொகுதி வாரியாக, ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள், அனைத்து கட்சி பூத் ஏஜன்ட்கள் உள்ளிட்டோருக்கு இப்பணி குறித்த பயிற்சி மற்றும் விளக்க முகாம் நடத்தப்படுகிறது.
அவ்வகையில் நேற்று திருப்பூர் வடக்கு தொகுதிக்கான முகாம் நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
வடக்கு தொகுதியில் அமைந்துள்ள 386 ஓட்டுச் சாவடிகளைச் சேர்ந்த முக்கிய கட்சிகளின் பி.எல்.ஏ. - 2 (பூத் ஏஜன்ட்கள்) இதில் பங்கேற்றனர்.
உரிய முன்னேற்பாடு செய்யப்படாத நிலையில், இக்கூட்டத்தில், பங்கேற்றோர் பெரும் அவதிக்குள்ளாகினர்.
தேவையான இட வசதி இன்றி, பலரும் வெளிப்பகுதியில் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும், முட்டி மோதிக்கொண்ட படியும் இருந்தனர்.
தேர்தல் துணை தாசில்தார் ராஜூ தலைமையில் நடந்தது. இப்பயிற்சி நடந்த இடம் பற்றாக்குறையாக இருந்த நிலையில், இரண்டு பிரிவாகப் பிரித்து, இருமுறை பயிற்சி விளக்கம் அளிக்கப் பட்டது.

