/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருநாய்கள் தொடர் அட்டகாசம்: விவசாயிகள் மறியல் போராட்டம்
/
தெருநாய்கள் தொடர் அட்டகாசம்: விவசாயிகள் மறியல் போராட்டம்
தெருநாய்கள் தொடர் அட்டகாசம்: விவசாயிகள் மறியல் போராட்டம்
தெருநாய்கள் தொடர் அட்டகாசம்: விவசாயிகள் மறியல் போராட்டம்
ADDED : நவ 07, 2025 12:17 AM

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம், வெள்ளகோவில், ஊதியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்களின் தொடர் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
தெருநாய்களால், கால்நடைகளை இழந்த விவசாயிகள், இறந்த ஆடுகளுடன் நேற்று ஊதியூர் பஸ் ஸ்டாப்புக்கு வந்தனர். தகவலறிந்து சென்ற வருவாய்த்துறையினர் பேச்சு நடத்தினர். காங்கயம் தாசில்தார் வந்து பேச வேண்டும் என வலியுறுத்தினர். மாலை, 3:00 மணி வரை, தாசில்தார் வராத காரணத்தால், இறந்த ஆடுகளை ரோட்டில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டம் காரணமாக, தாசில்தார் தங்கவேல் உடனே சென்று பேச்சு நடத்தினார். அதில், இறந்த ஆடுகளுக்கு உடனடியாக இழப்பீடு பெற்று தரவேண்டும், தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தினர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
22 ஆடுகள் பலி ஊதியூர், பாப்பினி, படியூர், நத்தக்காடையூர், வெள்ளகோவில், காடையூர் உள்ளிட்ட பகுதியில் சில ஆண்டுகளாகவே தெருநாய்கள் ஆட்டுப்பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்து கொன்று வரும் சம்பவம் தொடர்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதியில், ஆயிரக்கணக்கான ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்று வருகிறது. இப்பிரச்னைக்கு, இதுவரை நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
கடந்த, 3ம் தேதி இரவு ஊதியூர், வட்டமலைபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரின் பட்டியில் புகுந்த தெருநாய்கள், ஏழு ஆடுகளை கடித்து கொன்றது. ஊதியூர் காசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த கொங்குராஜ் என்பவரின் பட்டியில் புகுந்து, 12 ஆடுகளை கடித்துக் கொன்றது.
நேற்று முன்தினம் இரவு வட்டமலைபாளையம் சக்திவேல், என்பவரின் பட்டியில், மூன்று ஆடுகளை கடித்து கொன்றது. பத்து ஆடுகள் காயமடைந்தன. கடந்த, மூன்று நாட்களில் மட்டும், 22 ஆடுகள் பலியாகி உள்ளன. எனவே, போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

