ADDED : செப் 21, 2025 06:21 AM
திருப்பூர் : தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ளது. அதற்கு முன்னதாகவே தற்போது திருப்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக, திருப்பூர் பகுதியில் உள்ள நீர் வழிப்பாதைகள் அனைத்தும் துார் வாரப்பட வேண்டும். மழைக்காலங்களில், நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மழை நீர் முறையாகச் செல்ல வழியின்றி தடைப்படுவதும், கரையோரங்களில் உள்ள தாழ்வான பகுதிகள், குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து அவதி ஏற்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.
இதனை தவிர்க்கும் வகையில் நொய்யல் ஆறும் அதில் வந்து சேரும் ஓடைகளும் துார்வாரி சீரமை க்க வேண்டும் என்று, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதனையடுத்து, நேற்று திருப்பூர் நகரில் உள்ள நீர் வழிப்பாதைகள், ஓடைகள், மழை நீர் வடிகால்கள் ஆகியவற்றை மாநகராட்சி கமிஷனர் அமித் நேரில் சென்று பார்வையிட்டார். பல்வேறு ஓடைகளில் மண் மேடுகளும், கழிவுகளும் சேர்ந்து நீர் செல்வது தடைபடும் வகையில் இருந்த இடங்களை ஆய்வு செய்தார்.
மழைக்காலம் துவங்கும் முன் அவற்றை துார்வாரி, மழை நீர் எங்கும் தேங்காமல் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.