ADDED : ஆக 17, 2025 11:46 PM

திருப்பூர்; கோவில்வழியில் செயல்பட்டு மாநகராட்சி தெருநாய்கள் பராமரிப்பு மையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது.
கோவில்வழியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், நாய்களுக்கான அறுவை சிகிச்சை அரங்கமும், நாய்களை பராமரிக்கும் மையமும் பயன்பாட்டில் இருந்தது. மாநகராட்சி நிர்வாகத்தின் நேரடி கண்காணிப்பில் இப்பணி முன்னர் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இப்பணியை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்து மேற்கொண்டு வருகிறது.இதனால் கோவில்வழி மையம் பயன்படுத்தாமல் பூட்டி வைக்கப்பட்டது.
தற்போது மாநகராட்சியில் தெரு நாய்கள் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்ததால், கோவில்வழி மையத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இம்மையம் புனரமைப்பு செய்யும் பணி துவங்கியுள்ளது. இதற்காக அங்கு கூடுதலாக குடிநீர் வசதி, மின் வசதி ஆகியனவும், அறுவை முடிந்த தெரு நாய்கள் குறிப்பிட்ட நாட்கள் பராமரிக்கப்படும் வகையில் தனித்தனி அறைகள் ஏற்படுத்தும் வசதியும் அமைக்கப்படவுள்ளது. இதற்காக மாநகராட்சி பொது நிதியில் 2.15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் கோருதல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் இதன் மராமத்துப் பணிகள் துவங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.