/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெரு நாய்களால் கொஞ்ச நஞ்ச துன்பமல்ல...
/
தெரு நாய்களால் கொஞ்ச நஞ்ச துன்பமல்ல...
ADDED : மே 31, 2025 05:30 AM

'அளவுக்கு மிஞ்சினால், எதுவும் இடைஞ்சல் தான். அந்த வகையில் தான் தெரு நாய்களும் மாறிப் போயிருக்கின்றன. முந்தைய ஆண்டுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த தெரு நாய்களை, அங்குள்ள குடியிருப்புவாசிகளே உணவு கொடுத்து, தங்கள் குடியிருப்பு பகுதிக்கான காவலாளிகளாக மாற்றி வைத்திருந்தனர்.
நடைபயிற்சி செல்வோரும், பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை கொடுத்து தெரு நாய்களை நண்பர்களாக்கி கொள்வர். ஆனால், தற்போது நிலைமை வேறு; பல்கி பெருகிவிட்ட தெரு நாய்கள், மூர்க்கத்தனமாக மாறியுள்ளன; பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு எமனாக மாறி வருகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
வீதி, தெருவெங்கும் கூட்டம் கூட்டமாக திரியும் தெரு நாய்கள், காலை, மாலையில் நடைபயிற்சி செல்வோர், டூவீலரில் செல்வோர், பாதசாரிகள் என பலரையும் விரட்டி, கடிக்கின்றன. வீதிகளில் உற்சாக துள்ளலுடன் விளையாடும் சிறுவர், சிறுமியரையும் கூட விரட்டி கடிக்கின்றன.
டூவீலரில் செல்வோரை இடைமறித்து விரட்டும் தெரு நாய்களால், உயிர் பலி கூட அவ்வப்போது ஏற்படுகிறது என்பது தான் வேதனையின் உச்சம்.'நாய்க்கடியால் ரேபிஸ் என்ற வெறிநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது; நாய்க்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது' என்பதும் அரசின் புள்ளிவிபரம். மனிதர்களை மட்டுமின்றி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் கடித்து, பலி வாங்கும் அசாதாரண சூழலும் ஏற்பட்டுவிட்டது.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதன் மூலம் அவற்றின் இனப்பெருக்கத்தை குறைத்து, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதே, ஒரே தீர்வு என்ற நிலையில், கருத்தடை திட்டத்துக்கான கட்டமைப்புகள் பலவீனப்பட்டு கிடக்கின்றன.
தெருநாய்களை பிடிக்க போதியளவு ஊழியர்கள், அவற்றை அடைத்து எடுத்து செல்ல வாகனங்கள் இல்லாதது, கருத்தடை செய்ய போதியளவில் கால்நடை மருத்துவர்கள் இல்லாதது என, பல்வேறு நெருக்கடிகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் எதிர்கொண்டு வருகின்றன.
சில உள்ளாட்சி நிர்வாகங்கள், தனியார் அமைப்புகளின் உதவியுடன் தெருநாய்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும், எண்ணிக்கையில் மிக சொற்பமே. கருத்தடை திட்டத்தை முழு வீச்சில், தொடர்ச்சியாக செய்யாத வரை, மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையிலான போராட்டம் தொடரும் என்பதே யதார்த்தம்.