ADDED : ஆக 03, 2025 08:46 PM
உடுமலை; உடுமலை பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, மலர் சாகுபடி மேற்கொள்ள வாய்ப்புகள் இருந்தும், போதிய வழிகாட்டுதல்கள் இல்லாமல், விவசாயிகள் தயக்கத்தில் உள்ளனர்.
இதனால், உடுமலை பகுதி மலர்களுக்கான தேவை பிற மாவட்ட உற்பத்தியை அடிப்படையாக கொண்டே உள்ளது. 'பொக்கே' ரோஜா மலர்கள் பெங்களூரூ, ஓசூர் போன்ற பகுதிகளிலிருந்தும், பன்னீர் ரோஜாக்கள் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்தும் வருகிறது.
மேலும், மல்லிகை, முல்லை உட்பட மலர்கள் தேனி, மதுரை, வத்தலக்குண்டு உட்பட பகுதிகளிலிருந்து நாள்தோறும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால், மலர்களின் விலை விசேஷ நாட்களில், பல மடங்கு உயர்கிறது.
சிலர் பரிசோதனை முயற்சியாக, மல்லிகை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, உடுமலை பகுதியில், மலர் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்களை தோட்டக்கலைத்துறை செயல்படுத்த வேண்டும்.
காய்கறி சாகுபடியில், புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதில், உடுமலை விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, ரோஜா உட்பட மலர்களை உற்பத்தி செய்வதற்கான பசுமை குடில் முறை மற்றும் பிற மலர்களுக்கு விதை மானியம் ஆகியற்றை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.