/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சரியான திட்டமிடலால் வெற்றி சாத்தியமாகும்'
/
'சரியான திட்டமிடலால் வெற்றி சாத்தியமாகும்'
ADDED : நவ 02, 2025 03:17 AM

திருப்பூர்: ''வெற்றி என்பது புத்திசாலித்தனமான சிந்தனை, நிதி அறிவு, சரியான திட்டமிடலைப் பொறுத்தது,'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுசெயலாளர் திருக்குமரன் பேசினார்.
இந்திய தொழிற் கூட்டமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான சிறப்பு மையம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், இளம் தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டரங்கில் நடந்தது.
இந்திய தொழிற் கூட்டமைப்பின், திருப்பூர் மாவட்ட தலைவர் மனோஜ்குமார் வரவேற்று பேசுகையில், ''கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நுண் வணிகங்களின் எதிர்காலத்தை வடிவமைக்க, திருப்பூரில் 50 தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
புதிய பயண திட்டம், தமிழகத்தின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த, 300 தொழில் முனைவோருக்கு பயனளிக்கும். நிதிக்கான வரையறுக்கப்பட்ட அணுகல், குறைவான சந்தை வாய்ப்புகள் மற்றும் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை போன்ற, குறு, சிறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பேசினார். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணவே, புதிய பயணம் - வளர்ச்சியை நோக்கி' என்ற பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது,'' என்றார்.
தடைகள் இருந்தபோதிலும், இந்தியா அனைத்து தொழில்களிலும் தொடர்ந்து வலுவாக பங்களித்து வருகிறது. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன. நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. நிகழ்ச்சியில், மதுரை நந்திதா குழுமத்தின் பயிற்சியாளர் விஸ்வநாதன் மற்றும் பூர்ணலதா குழுவினர், பயிற்சி அளித்தனர்.
'வணிகம் 360', 'லாபம் மற்றும் இழப்பு', ஒரு குழுவை உருவாக்குதல், நிதியில் இருந்து நிதி சுழற்சி, இருப்புநிலை, விற்பனை யுத்தி, சந்தைப்படுத்தல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இரண்டு நாட்களில், நிதி திட்டமிடல், பணப்புழக்கம், தலைமைத்துவம், இடர் மேலாண்மை, விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவணிக நிர்வாகத்தின் முக்கிய அம்சங்கள் குறித்த நடைமுறை நுண்ணறிவுகளை பங்கேற்பாளர்கள் பெற்றுள்ளதாகக் கூறினர்.
இரண்டு நாள் நடந்த பயிலரங்கு, தொழில்முனைவோருக்கு சவால்களை சமாளிப்பதற்கும் எதிர்காலத்தில் வெற்றி பெறுவதற்கும் திறன்களையும் அறிவையும் வழங்குவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்ததாக, வரவேற்பு தெரிவிக்கப்பட்டது
திருப்பூர் எப்போதும் வாய்ப்புகளின் பூமியாக இருந்து வருகிறது. இன்றைய வேகமாக மாறிவரும் வணிக உலகில் வெற்றி என்பது புத்திசாலித்தனமான சிந்தனை, நிதி அறிவு, சரியான திட்டமிடலைப் பொறுத்தது. தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களை வளர்ப்பதற்கு, உண்மையான வளர்ச்சி தொடர்ச்சியான முயற்சி மற்றும் ஒழுக்கத்திலிருந்து கிடைக்கும். பயிற்சியின் வாயிலாக பெற்ற வழிகாட்டுதலை, தொழிலில் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- திருக்குமரன்: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுசெயலாளர்.:
ஆடைத்துறையை தவிர, திருப்பூர் மற்ற தொழில்களிலும் வளர வேண்டும் என்பதே, திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்பு. கொரோனா தொற்றுநோய்க்குப் பின், உலகளாவிய சந்தை மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலைகள், இந்தியாவிற்கு பெரிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டன. இருப்பினும், அமெரிக்க வரி உயர்வு போன்ற பிரச்னைகள் இந்திய ஏற்றுமதிக்கு சவாலாக மாறிவிட்டன.
தாராபுரம் மற்றும் உடுமலை போன்ற நகரங்கள் பண்டிகைக் காலத்தில் இரண்டு முதல் 2.5 கோடி ரூபாய் வரை விற்பனை பதிவாகியுள்ளது. கடந்த, 2009ம் ஆண்டு முதல் பல ஆண்டு இழப்புகளுக்குப் பின், 'அமேசான், 2025ல் 300 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியது. மாற்றொருவரை போல் மாறுதல் என்ற மனநிலையை தாண்டி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக மாற வேண்டும் என்பதில் கவனம் செலத்த வேண்டும்.
- குமார் துரைசாமி: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கஇணை செயலாளர்.:

