/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நவீன நீடித்த சாகுபடி தொழில்நுட்பத்தால் தித்திக்கும் கரும்பு! : செலவு குறையும்; மகசூல் அதிகரிக்கும்
/
நவீன நீடித்த சாகுபடி தொழில்நுட்பத்தால் தித்திக்கும் கரும்பு! : செலவு குறையும்; மகசூல் அதிகரிக்கும்
நவீன நீடித்த சாகுபடி தொழில்நுட்பத்தால் தித்திக்கும் கரும்பு! : செலவு குறையும்; மகசூல் அதிகரிக்கும்
நவீன நீடித்த சாகுபடி தொழில்நுட்பத்தால் தித்திக்கும் கரும்பு! : செலவு குறையும்; மகசூல் அதிகரிக்கும்
ADDED : செப் 27, 2024 11:12 PM

உடுமலை: 'கரும்பு சாகுபடியில், நவீன நீடித்த சாகுபடி தொழில் நுட்பங்களை பயன்படுத்தினால், நீர், உரச்செலவு குறைவதோடு, ஏக்கருக்கு, 120 டன் வரை மகசூல் பெற முடியும்,' என, சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
உடுமலை வட்டார வேளாண்மை துறை சார்பில், -அட்மா திட்டத்தின் கீழ், நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து, பெருமாள் புதுாரில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
உடுமலை வேளாண் உதவி இயக்குநர் தேவி தலைமை வகித்தார். அவர், வேளாண்துறை சார்பில், விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயிர் விளைச்சல் போட்டிக்கு விண்ணப்பம் பதிவு, பயிர் காப்பீடு திட்டத்தின் பயன்பாடு, பயிர்களில் உரங்களின் பயன்பாடு, துவரை சாகுபடி குறித்து விளக்கினார்.
உதவி வேளாண் அலுவலர் முருகானந்தம், 'எலையமுத்துார் கிராமத்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மைய கிடங்கில், விவசாயிகளுக்கு வழங்க இருப்பு வைக்கப்பட்டுள்ள இடு பொருட்கள் குறித்து விளக்கினார்.
ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தவப்பிரகாஷ் பேசியதாவது:
நவீன நீடித்த கரும்பு சாகுபடி என்பது, சாதாரண முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். நாற்றங்கால் தயாரித்து, 25- முதல், 35 நாட்கள் முற்றிய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
வரிசைக்கு வரிசை, 5 அடி இடைவெளி இருக்க வேண்டும். கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்து, நீர் பாய்ச்சுவதன் வாயிலாக நீர் மற்றும் உரப்பயன்பாடு பெருமளவு குறைகிறது.
விதை நேர்த்தி செய்த விதை மொட்டுக்களை, கோணிப்பையில் இறுகக்கட்டி நிழலில் அடுக்கி வைக்க வேண்டும். இவற்றை காற்றுப்புகாதவாறு நன்கு மூடியிருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
நன்கு மூடிய கோணிப்பைகளின் மீது பாரம் ஏற்றி, 5 நாட்கள் அப்படியே இருத்தல் வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை.
முதலில் குழித்தட்டுகளில், பாதியளவில், 'கோகோ பீட்' கொண்டு நிரப்ப வேண்டும். பின்பு விதை மொட்டுக்கள் மேல்நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி, குழிகளை 'கோகோ பீட்' கொண்டு நிரப்ப வேண்டும்.
குழித்தட்டுகளை வரிசையாகத் தண்ணீர் தெளிக்க வசதியாக வைக்க வேண்டும். தினசரி தண்ணீர் தெளிப்பது அவசியம். ஏக்கருக்கு சுமார் 300 சதுர அடி தேவை; நிழல் வலை அல்லது மர நிழலிலோ நாற்றுக்கள் வைக்க வேண்டும்.
குழி தட்டு முறையில், விதைப்பரு சீவல்களிலிருந்து, 25 முதல், -35 நாட்கள் வயதுடைய, 3 -முதல், 4 இலை வந்த நாற்றுகளை, 5க்கு 2 இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த மூன்று நாட்களில் வளர ஆரம்பித்து விடும்.
கரும்பு வளர்ந்து, 3 அல்லது, 4 பக்க கணுக்கள் வரும் போது மையக் கணுவை கிள்ளி விட்டால், 15 முதல், -20 பக்க கனுக்கள் வந்து, ஒர ஏக்கருக்கு, 100-முதல், 120 டன் மகசூல்பெற முடியும். மேலும், 70 நாள் சாகுபடி காலமாக கொண்ட பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்து விடலாம்.
நீடித்த நவீன கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளியில் இருப்பதால் ஊடுபயிராக காய்கறிகள், பயறு வகைகள், வெள்ளரி, தர்ப்பூசணி, பசுந்தாள் உரப் பயிர்களை பயிர் செய்ய முடிகிறது.
மேலும் ஊடுபயிர் செய்வதால் அதிக லாபம், களைக் கட்டுப்பாடு மற்றும் மண்வளம் பெருக்க முடியும்.
மண் அணைத்தல்
நடவு செய்த, 45 வது நாள் மற்றும், 90 வது நாள் மண் அணைப்பு செய்ய வேண்டும். ஒளிச்சேர்க்கைக்கு, மேற்புறமுள்ள 8 முதல், -10 இலைகளே தேவைப்படுகின்றன.
எனவே, கீழ்ப்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை, 5 மற்றும் 7-வது மாதத்தில் உரித்து பார் இடைவெளியில் இட வேண்டும்.
சோகை உரிப்பதால், சுத்தமான பயிர் பராமரிப்பு, பயிர்களுக்கு இடையே காற்றோட்டம் அதிகரிப்பு, பூச்சி தாக்குதல் குறைவு, மற்ற ஊடுபயிர் பராமரிப்பு பணிகள் எளிதாகின்றன.
நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை வாயிலாக, சாகுபடி காலம், ஒரு மாதம் குறைவதோடு, 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கிறது.
இவ்வாறு, பேசினார்.
வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை வட்டார தொழில் நுட்ப மேலாளர் உமாசாலினி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கவிமலர், மனோஜ்குமர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.