/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய கபடி போட்டியில் தமிழக அணி அசத்தல்
/
தேசிய கபடி போட்டியில் தமிழக அணி அசத்தல்
ADDED : நவ 23, 2024 05:44 AM

திருப்பூர் : தேசிய கபடி போட்டியில், அசத்தலாக ஆடிய தமிழக மாணவியர் கபடி அணி, நுாலிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டு, இரண்டாமிடம் பெற்றனர்.
ம.பி., மாநிலம், நரசிங்க்பூரில், எஸ்.ஜி.எப்.ஐ., சார்பில், 17 வயதுக்குட்பட்ட மாணவியர் தேசிய கபடி போட்டி, நவ., 16 முதல், 20 வரை நான்கு நாட்கள் நடந்தது. லீக், நாக்அவுட், காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டியில் முறையே ஜார்கண்ட், உத்தரகாண்ட், அசாம், மகாராஷ்டிரா, உ.பி., அணிகளை வென்று, அசத்திய, தமிழக மாணவியர் கபடி அணி, இறுதிபோட்டியில் ஹரியானா மாநில அணியை எதிர்கொண்டது.
துவக்கம் முதலே அதிரடி காட்டிய தமிழக அணி, புள்ளிகளை எடுப்பதில் வேகம் காட்டியது. ஒரு கட்டத்தில் ஆட்ட நிறைவடையும் நேரத்துக்கு இரண்டு நிமிடம் முன்பாக, ஆட்டம் சமநிலையை (33-33) எட்டியது. இறுதியில், ஹரியானா அணி, 36 - 35 என வெற்றி பெற்றது. ஒரு புள்ளி வித்தியாசத்தில், நுலிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டு, இரண்டாமிடம் பெற்றது, தமிழக அணி.
பதினேழு வயதுக்கு உட்பட்ட தமிழக அணியின் பயிற்சியாளராக, திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் பிரதீப்கமல், அணி மேலாளராக, முத்துார், அரசு மேல்நிலைப்பள்ளி, உடற்கல்வி ஆசிரியர் செந்திலதிபன், மேலாளராக காங்கயம், ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை ரஞ்சனி உடன் சென்றனர். எஸ்.ஜி.எப்.ஐ., நடத்திய தேசிய கபடி போட்டியில், கடைசி வரை போராடி, இரண்டாமிடம் பெற்ற தமிழக அணிக்கு, கபடி ஆர்வலர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.