/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமப்பகுதி அரசு பள்ளிகளில் கலை போட்டி; ஆசிரியர்கள் வலியுறுத்தல்
/
கிராமப்பகுதி அரசு பள்ளிகளில் கலை போட்டி; ஆசிரியர்கள் வலியுறுத்தல்
கிராமப்பகுதி அரசு பள்ளிகளில் கலை போட்டி; ஆசிரியர்கள் வலியுறுத்தல்
கிராமப்பகுதி அரசு பள்ளிகளில் கலை போட்டி; ஆசிரியர்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 04, 2025 08:02 PM
உடுமலை; அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகளை, கிராமப்பகுதி பள்ளிகளில் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்துவதற்கும், அத்திறன்களை அடையாளப்படுத்தி அவர்களை ஊக்குவிப்பதற்கும், கல்வியாண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடக்கிறது.
இப்போட்டிகள் பள்ளி அளவில் முதலில் துவங்கி வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் நடத்தப்பட்டு, பரிசு, சான்றிதழ் மற்றும் கலையரசன், கலையரசி பட்டங்களும் வழங்கப்படுகிறது.
நடனம், இசை, பேச்சு, கட்டுரை போன்ற போட்டிகள் மட்டுமில்லாமல், கைவினைப்பொருட்கள் தயாரித்தல் போன்ற வித்தியாசமான போட்டிகளும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
இத்திருவிழா வாயிலாக, அரசுப்பள்ளிகளின் அடையாளமும் வெளிப்படுகிறது. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில், பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் துவங்கியுள்ளன.
வட்டார அளவிலான போட்டிகள், வேறு பள்ளிகளை மையமாக கொண்டு அப்பள்ளிகளில் நடத்தப்படுகிறது.
ஆனால், ஆண்டுதோறும் உடுமலை நகர அரசு ஆண்கள் மேல்நிலை, பெண்கள் மேல்நிலை, எஸ்.கே.பி, விசாலாட்சி உட்பட நகரையொட்டியுள்ள பள்ளிகளில் மட்டுமே, இப்போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இப்பள்ளிகள் மட்டுமே மையங்களாகவும் அமைக்கப்படுகின்றன.
நடப்பாண்டில், வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள், இதுவரை மையங்களாக இல்லாத கிராமப்பகுதி அரசு பள்ளிகளில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் தரணும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
கிராமப்பகுதி பள்ளிகளை அடையாளப்படுத்தும் முயற்சியில், இதுபோன்ற விழாக்கள் நடத்துவதும் முக்கியமானது. ஒரே பள்ளிகளில் நடத்தப்படுவதால், அங்கு வரும் பெற்றோர் அப்பள்ளிகளில் உள்ள வசதிகளை மட்டுமே பார்வையிடுகின்றனர்.
அப்பள்ளிகளின் கட்டமைப்புகளை கவனிக்கின்றனர். ஆனால் பல கிராமப்பகுதி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் பெற்றோருக்கு இன்னும் தெரிவதில்லை.
கலைத்திருவிழா போன்ற நிகழ்ச்சிகளை இவ்வாறு அறியப்படாத பள்ளிகளில் நடத்துவதால், பெற்றோரும் பள்ளிகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு, கிராமப்பகுதி பள்ளிகளுக்கான வாய்ப்பாகவும் இருக்கும்.
இவ்வாறு கூறினர்.