/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் விழா: பேச்சில் எட்டப்படாத தீர்வு
/
கோவில் விழா: பேச்சில் எட்டப்படாத தீர்வு
ADDED : டிச 08, 2025 05:27 AM
திருப்பூர்: காங்கயம் அடுத்த, நத்தக்காடையூர் மாரியம்மன் கோவில், நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் பொங்கல் விழா 15 நாள் விழாவாக நடைபெறுவது வழக்கம்.
அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்று தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர். நடப்பாண்டு இதில் ஒரு சமுதாயத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் வகையில், விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துள்ளதாக புகார் எழுந்தது. அறநிலையத் துறைக்குச் சொந்தமான, சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு சமுதாய மக்களும் இணைந்து கொண்டாடும் விழாவில் ஒரு தரப்பினர் மட்டும் முன்னின்றும் பிற சமுதாயத்தினர் புறக்கணிக்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது.
காங்கயம் தாசில்தார் முன்னிலையில் நேற்று முன்தினம் மாலை அமைதிப் பேச்சு நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சு வார்த்தையில் ஒரு தரப்புக்கு சாதகமாக அதிகாரிகள் பேசுவதாக கூறி மற்றொரு தரப்பினர் எழுத்து பூர்வமாக கடிதம் அளித்து விட்டு வெளியேறினர்.
இன்று (8ம் தேதி) கலெக்டர், அறநிலையத் துறை இணை கமிஷனர் ஆகியோரைச் சந்தித்து முறையிடவும், பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

