UPDATED : நவ 06, 2026 07:21 PM
ADDED : நவ 05, 2026 11:38 PM

திருப்பூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வசதிக்காக தற்காலிக ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. ரயில் ஏற வரும் பயணிகள் காத்திருக்கவும், ரயிலில் இருந்து இறங்குவோர் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டாவது பிளாட்பார்மில் அம்ரூத் பாரத் திட்டத்தின்கீழ் பல்வேறு கட்டமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. விரிவுபடுத்தப்பட்ட நுழைவாயில் கட்டுமானப் பணியும் நடைபெறுவதால், பயணிகள் உள்ளே செல்வதிலும், வெளியே வருவதிலும் இடையூறு ஏற்படுகிறது.
இன்றும், நாளையும் ரயில்களில் பயணிக்கவும், வெளியேறவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு மற்றும் பிளாட்பார்மில் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க, புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகே ரயில்வே நிர்வாகம் தற்காலிக ஓய்வறையை அமைத்துள்ளது. இங்கு இருக்கைகள் மற்றும் கைப்பேசிகளுக்கு மின்னேற்றம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் கூறுகையில், மழை அல்லது வெயில் நேரங்களில் வயதானவர்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் எனப் பலரும் பிளாட்பார்மில் காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் பயணிகள் நகர்ந்து செல்வதற்குக்கூட இடையூறு ஏற்படுகிறது. கூட்டம் அதிகரிக்கும் நேரங்களில் பயணிகளைத் தற்காலிக ஓய்வறையில் அமர வைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
