/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தவறுக்கு துணைபோகிறவன் மன்னிக்கமுடியாத குற்றவாளி'
/
'தவறுக்கு துணைபோகிறவன் மன்னிக்கமுடியாத குற்றவாளி'
ADDED : டிச 07, 2024 06:47 AM

திருப்பூர்; திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள, ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜையை முன்னிட்டு, ராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றுவருகிறது.
மஹாரண்யம் முரளீதர சுவாமிகளின் சீடர் முரளிஜி பேசியதாவது:
அரக்கர் குலத்தில் பிறந்தாலும் விபீஷணன் நல்லவன். வைகுண்டத்தில் பகவானின் கையில் இருக்கும் கதை தான் விபீஷணனாக அவதாரம் எடுத்தது. சபையில் ஆலோசனை கேட்ட அண்ணன் ராவணனுக்கு, விபீஷணன் புத்தி கூறினான். தம்பி விபீஷணன் கூறிய எதையும் ராவணன் காதுகொடுத்து கேட்கவில்லை; மாறாக, விபீஷணனை காலால் எட்டி உதைத்து விட்டான்.
மகா பலசாலியான கும்பகர்ணனும், 'சீதையை துாக்கி வந்தது நீ மிகப்பெரிய தவறு செய்துவிட்டாய். இந்த பாவம், நமது ராட்சத குலத்தையே அழித்துவிடும்' என்றான். மகாபாரதத்தில் கர்ணனையும், ரமாயணத்தில் கும்பகர்ணனையும் நம்மில் பலரும் நல்லவர்கள் என்போம். கர்ணன் தான தர்மங்கள் செய்தவன்தான். போரில் அர்ஜூனனின் மகன் அபிமன்யு, நிராயுதபாணியாக சக்ராவியூகத்தில் சிக்கிக்கொண்டபோது, அம்பு எய்து அழிக்க துாண்டியவன் கர்ணன்.
சீதையை துாக்கிவந்தது தவறு என, அறிவுரைகளையெல்லாம் கூறிய கும்பகர்ணனோ கடைசியில், ராவணனை பார்த்து, 'என்ன இருந்தாலும் நீ என் அண்ணன்; பயப்படாதே... நான் உன்னுடன் இருந்து போர்புரிவேன்' என்றான். தவறு செய்பவனைவிட, தவறுக்கு துணைபோகிறவன் மன்னிக்கமுடியாத மிகப்பெரிய குற்றவாளி. ஒருவேளை கும்பகர்ணன் போர்புரிய மறுத்திருந்தால், ராவணன் திருந்தியிருக்கலாம் அல்லவா! எனவே, கும்பகர்ணன் குற்றவாளிதான்.