ADDED : செப் 30, 2025 01:06 AM

திருப்பூர்: செயற்கை நுாலிழை துணியில் இருந்து உருவாகும், 'கட்டிங் வேஸ்ட்' கழிவுகளுக்கு வரவேற்பு குறைவு என்பதால், நிறுவனங்களில் மூட்டை மூட்டையாக தேங்கியுள்ளதாக, உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஆடை தயாரிப்பில், ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த தொழில் நகரமாகிய திருப்பூர், அவ்வப்போதைய தேவைகளுக்காக, தன்னைத்தானே நவீனமாக்கி கொள்கிறது. உற்பத்தி, வர்த்தகம் என, இரண்டிலும் தன்னிறைவைப்பெற்ற திருப்பூர், புதிய சவால்களை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பனியன் நிறுவனங்களில் கழிவாக வெளியேற்றப்படும், 'கட்டிங் வேஸ்ட்'கழிவுகளும் காசு சம்பாதிக்கும் வழியாக இருந்தது. பனியன் நிறுவனங்களில் தேங்கும், பனியன் 'கட்டிங் வேஸ்ட்' துணிகளை வாங்கி, நுாலாக பிரித்து, அதனை கனரக வாகனங்களை சுத்தம் செய்ய, பாக்கெட்டுகளாக விற்று வந்தனர்.
காசாகும் 'கட்டிங் வேஸ்ட்' பெரிய கட்டிங் வேஸ்ட் கிடைத்தால், அதைக்கொண்டு, குழந்தைகளுக்கான ஆடைகள் கூட தயாரித்தனர்.
கடந்த, 10 ஆண்டுகளாக, பனியன் 'கட்டிங் வேஸ்ட்' துணியை, மீண்டும் பஞ்சாக அரைத்து, 'ஓ.இ., மில்கள் வாயிலாக, அவற்றை மீண்டும் நுாலாக மாற்றி, அதிலிருந்து புதிய பின்னலாடை தயாரித்து விற்கும் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்துவிட்டது.
செயற்கை நுாலிழை ஆடை பருத்தி பனியன் துணிக்கு மாற்றாக, செயற்கை நுாலிழையில் தயாரான துணிகள், தொடர்ந்து இறக்குமதியாகின்றன. குறிப்பாக, கொரோனா தொற்றுக்கு பிறகு, திருப்பூரில் பாலியஸ்டர் போன்ற செயற்கை நுாலிழை துணியில் இருந்து ஆடை தயாரிப்பது அதிகரித்தது.
பாலியஸ்டர் துணி உற்பத்தி இந்தியாவில் அதிகம் நடப்பதில்லை. சீனாவில் இருந்து, மலிவு விலைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. சாயமிடப்பட்ட 'பேப்ரிக்' என்பதால், வாங்கி அப்படியே 'கட்டிங் செய்து, ஆடைகள் வடிவமைக்க வசதியாக இருக்கிறது. இதனால், சிறிய யூனிட்கள், இத்தகைய துணியை வாங்கி, ஆடை தயாரிக்க ஆர்வம் காட்டுகின்றன.
வழக்கம் போல், பாலியஸ்டர் துணியை வெட்டி தைக்கும் போது, உருவான 'கட்டிங் வேஸ்ட்'கள், மறுசுழற்சி முறையில் நுாலிழை தயாரிக்க ஒத்துழைக்கவில்லை. இதனால், பாலியஸ்டர் ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில், அதிக அளவு, 'கட்டிங் வேஸ்ட்' மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன; சிலர், மிகக்குறைந்த விலைக்கு தள்ளிவிடுகின்றனர்.
குப்பையாக மாறுகிறது
குறு, சிறு யூனிட்டுகள், இரவு நேரத்தில் 'கட்டிங் வேஸ்ட்' மூட்டைகளை எடுத்துச்சென்று, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில், ரோட்டோரமாக வீசிவிடுகின்றனர். சில நாட்களுக்கு பிறகு, அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதேபோல், திருப்பர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில், பாலியஸ்டர் செயற்கை நுாலிழையில் தயாரித்த 'கட்டிங் வேஸ்ட்'கள், அதிக அளவு தேக்கமடைந்துள்ளன.
எல்லாமே காசு தானுங்க!
பருத்தி, பருத்தி மற்றும் விஸ்கோஸ், பருத்தி மற்றும் பாலியஸ்டர் என, பல்வேறு வகையான துணியை வாங்கி ஆடை தைக்கின்றனர். கழிவுகளும், அனைத்து ரகங்களும் கலந்து இருக்கின்றன. பாலியஸ்டர் துணியை தனியாக அரைத்தால், மெஷின் சூடாகும்; பருத்தி துணி கழிவுடன் சேர்த்து அரைக்கலாம். அனைத்து ரக கட்டிங் வேஸ்ட்களுக்கும், காசு கிடைக்கும். கிலோ, 10 ரூபாய் முதல், 110 ரூபாய் வரை 'கட்டிங் வேஸ்ட்' விற்கப்படுகிறது. எனவே, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியாளர், 'கட்டிங் வேஸ்ட்'களையும் காசாக்க முடியும்.
- ஜெயபால்
மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்