/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரும்புக்கு தேவை நிலையான விலை; பாசன விவசாயிகள் வலியுறுத்தல்
/
கரும்புக்கு தேவை நிலையான விலை; பாசன விவசாயிகள் வலியுறுத்தல்
கரும்புக்கு தேவை நிலையான விலை; பாசன விவசாயிகள் வலியுறுத்தல்
கரும்புக்கு தேவை நிலையான விலை; பாசன விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 28, 2024 12:25 AM
உடுமலை : சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், கரும்புக்கு நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என, ஏழு குள பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக காய்கறி, பயிர் சாகுபடியும் நடக்கிறது.
கரும்பு பயிரையும் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். உடுமலை ஏழு குள பாசன பகுதியில், முன்பு கரும்பு பிரதான சாகுபடியாக இருந்தது. போடிபட்டி, பள்ளபாளையம் சுற்றுப்பகுதிகளில், 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக கரும்பு சாகுபடியானது.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, இப்பகுதியில் இருந்து அதிகளவு கரும்பு அனுப்பி வந்தனர். பின்னர், வெல்லம் தயாரிப்புக்கு, விளைநிலங்களில் ஆலை அமைத்து, உற்பத்தி செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக வெல்லத்துக்கு போதிய விலை கிடைக்கவில்லை. கேரளா மாநிலத்துக்கு வெல்லம் அனுப்புவது வெகுவாக குறைந்து விட்டது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையிலும், உற்பத்தி துவங்குவது கேள்விக்குறியாக மாறிவிட்டது.
இதனால், படிப்படியாக, கரும்பு சாகுபடியை கைவிட்டு, ஏழு குள பாசன விவசாயிகள், வாழை மற்றும் தென்னை சாகுபடிக்கு ஆர்வம் காட்ட துவங்கினர். தற்போது குறைந்த பரப்பளவிலேயே கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் போதிய விலை கிடைக்காததால், வெல்லம் உற்பத்தியை கைவிட்டுள்ளோம். எனவே பிற பகுதிகளுக்கு கரும்பை நேரடியாக விற்பனை செய்கிறோம்.
சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், கரும்புக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், நாங்கள் கவலையடைந்துள்ளோம். இதற்கு எங்களுக்கு அரசும், வேளாண்துறையும் உதவ வேண்டும்.
எனவே தமிழக அரசு கரும்புக்கான ஆதார விலையை இந்தாண்டு உயர்த்தி வழங்கவேண்டும். இல்லாவிட்டால், இப்பகுதியில், கரும்பு சாகுபடி முற்றிலுமாக காணாமல் போகும் வாய்ப்புள்ளது.
அரசின் உதவி செய்யும் போது, எங்களின் பிரச்னைகள் தீர்வதற்கும் வழி ஏற்படும். இதை அரசும், சம்பந்தப்பட்ட துறையும் செய்யும் என நம்புகிறோம்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.