
திருப்பூர்: திருப்பூர், காங்கயம் பகுதியில் கோழிப்பண்ணைக்குள் புகுந்த நாய்களின் வெறியாட்டத்துக்கு, 270 கோழிகள் பலியாகின; 2 ஆடுகள் கடிபட்டுள்ளன.
வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் தெரு நாய்கள், விவசாய நிலங்களில் புகுந்து ஆடுகளை கடிக்கின்றன: இதில், நுாற்றுக்கணக்கான ஆடுகள் பலியாகியுள்ளன. அதே போன்று, கோழிகளையும் ஆடுகள் கடிக்கின்றன.
நேற்று முன்தினம் இரவு, திருப்பூர் மாவட்டம், காங்கயம், அலகேகவுண்டம் புதுாரில், கோபால்ராஜ் என்பவரின் கோழிப்பண்ணைக்குள் புகுந்து தெரு நாய்கள் கடித்ததில், பண்ணைக்குள் இருந்த, 270 கோழிகள் பலியாகின.
திருப்பூர், ஊத்துக்குளி வட்டம், புஞ்சை தளவாய்பாளையம் கிராமம், சாலபாளையத்தில் உள்ள மோகன்ராஜ் என்பவரது தோட்டத்து பட்டிக்குள் நுழைந்த, தெரு நாய்கள், கடித்ததில், இரண்டு ஆடுகள் இறந்தன.
அடுத்தடுத்த இச்சம்பவங்கள், விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி, விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது.'தெரு நாய்கள் கடித்து இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் விளைவாக, 45 நாட்களில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கடந்தாண்டு, நவ., 23ல், மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது.
வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த விவசாயி வேலுசாமி கூறியதாவது:நாய்கள் கடித்து பலியாகும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்திருக்கிறது; அதன்படி, இன்னும், 4, 5 நாட்களில் அதுதொடர்பான அறிவிப்பு வெளியாக வேண்டும். நேற்று ஏற்பட்ட கோழி, ஆடுகள் பலியான சம்பவம் குறித்து தாசில்தாரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்; இந்த விவகாரத்தை, கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்தார்.
கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை வழங்கியிருக்கிறோம்; மாவட்ட கலெக்டர் தான் முடிவெடுக்க வேண்டும்.
தெரு நாய்களை முழுவீச்சில் கட்டுப்படுத்த வேண்டும். அல்லது, இறந்த ஆடுகளுக்கு நிச்சயம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதுதொடர்பாக, அரசு கொள்கை முடிவு எடுத்தாக வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.