/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பின்னலாடைத் தொழில் தேச வளர்ச்சியின் சக்தி'
/
'பின்னலாடைத் தொழில் தேச வளர்ச்சியின் சக்தி'
ADDED : ஜூலை 30, 2025 10:09 PM

திருப்பூர்; ''தேச வளர்ச்சிக்குப் பெரும் சக்தியாக, திருப்பூர் பின்னலாடைத்துறை விளங்குகிறது'' என்று, கோவை, வருமான வரி தலைமை கமிஷனர் அருண்பரத் பேசினார்.
வருமான வரித்துறை சார்பில், வருமான வரி விழிப்புணர்வு கருத்தரங்கு, அம்மாபாளையத்தில் நடந்தது. திருப்பூர் சரக இணை கமிஷனர் இளங்கிள்ளி வரவேற்றார்.
கோவை, வருமான வரி தலைமை கமிஷனர் அருண்பரத் பேசியதாவது:
வருமான வரித்துறை மற்றும் வரி செலுத்துவோருக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில், இத்தகைய கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம், வரி செலுத்துவோரின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யவும் வாய்ப்பாக அமைகிறது.
நாட்டின் முன்னேற்றத்தில், திருப்பூர் வரி செலுத்துவோரின் பங்களிப்பு மிக முக்கியமானது; லட்சக்கணக்கான தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பின்னலாடைத் தொழில், நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சக்தியாக இருக்கிறது. நாணயம் மற்றும் ஒற்றுமையில் சிறந்து விளங்குவதோடு மாசில்லாத துாய்மையான நகரமாகவும் திருப்பூர் விளங்குகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
திருப்பூர் பட்டய கணக்காளர் சங்க தலைவர் தருண், முன்னாள் தலைவர் சிவாச்சலம் உள்ளிட்டோர் பேசினர். திருப்பூர் சரகத்தில், அதிக அளவு வருமானவரி செலுத்துவோர் மற்றும் தொழில்துறையினர் கவுரவிக்கப்பட்டனர்.
திருப்பூர் வருமானவரி சரக துணை கமிஷனர் கண்ணன் நன்றி கூறினார். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் பங்கேற்றனர்.