/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கன்ஸ்ட்ரோ' மெகா கண்காட்சி 4 நாள் நடக்கிறது !
/
'கன்ஸ்ட்ரோ' மெகா கண்காட்சி 4 நாள் நடக்கிறது !
ADDED : ஜூலை 15, 2025 11:09 PM

திருப்பூர்; திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில், 'கன்ஸ்ட்ரோ மெகா 2025' கட்டுமான பொருள் கண்காட்சி வரும் 18 ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.
திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் தலைவர் குமார் சண்முகம்; செயலாளர் ராஜசேகர், பொருளாளர் சதீஸ்பாபு ஆகியோர் கூறியதாவது:
கடந்த, 26 ஆண்டாக இயங்கி வரும் எங்கள் சங்கத்தின் சார்பில், 20வது ஆண்டு கட்டுமானப் பொருள் கண்காட்சி, திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் வரும், 18ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. 18ம் தேதி நடக்கும் துவக்க விழாவில் அமைச்சர் சாமிநாதன், எம்.பி., சுப்பராயன், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
விழாவில், 'பொறியியல் பொக்கிஷம் 2025' எனும் நுால் வெளியிடப்படவுள்ளது. சங்கத்தின் சார்பில் பல்வேறு பொதுநல சேவைகளும் செய்து வருகிறோம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிபொறியாளர் சங்க கூட்டமைப்புடன் இணைந்த சங்கம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கண்காட்சி தலைவர் பிரகாஷ், செயலாளர் சரவணகுமார் ஆகியோர் கூறியதாவது:
இந்த கண்காட்சியில், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கின்றன. கட்டுமானப் பொருட்களில் இயற்கையை பாதிக்காத சுற்றுச் சூழலுக்கு ஏற்ற பொருட்கள், செலவினங்களை குறைக்கும் விதமான பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெறுகிறது.
அஸ்திவாரத்துக்கு குழி தோண்டும் பொருட்கள் முதல் பினிஷிங் பெயின்ட் வரை அனைத்து பொருட்களுக்கான அரங்குகளை பார்வையிடலாம். கல், மணல், செங்கல், இரும்பு, கம்பி, பெயின்ட், எலக்ட்ரிக்கல்ஸ், இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் அலங்காரம்; மின் விளக்குகள்; பர்னிச்சர்கள்; அனைத்து அறைகளுக்குமான பர்னிஷிங் மற்றும் உபகரணங்கள், பாதுகாப்பு அம்சத்துக்கான கருவிகள் இடம் பெறுகிறது.
புதிய கட்டடம் கட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். தினமும், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை இலவசமாக பார்வையிடலாம். தினமும் மாலையில், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. தினமும் மாலை 6:00 வரை கண்காட்சி வளாகத்தில் இலவச பல், காது பரிசோதனை, பொது மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. பார்வையாளர்களுக்கு மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.