/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்ளாட்சியின் முக்கிய சவால் குறைகள் களைய வலியுறுத்தல்
/
உள்ளாட்சியின் முக்கிய சவால் குறைகள் களைய வலியுறுத்தல்
உள்ளாட்சியின் முக்கிய சவால் குறைகள் களைய வலியுறுத்தல்
உள்ளாட்சியின் முக்கிய சவால் குறைகள் களைய வலியுறுத்தல்
ADDED : அக் 10, 2024 05:57 AM

'ஜல்சக்தி' அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை வாயிலாக, ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்துள்ள முன்னேற்றம் ஆகியவற்றை முக்கிய அளவீடுகளாக கொண்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தர வரிசைப்படுத்தப்படுவது வழக்கம்.
அவ்வகையில், கடந்த, 2021-2022ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில், தேசிய அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், தமிழகம் மூன்றாமிடம் பிடித்துள்ளது. இதில், திருப்பூர் மாவட்டத்தில், 265 கிராம ஊராட்சிகள் உள்ளன. தர வரிசை மதிப்பீட்டில், இந்த ஊராட்சிகளுக்கும் பங்குண்டு என்ற நிலையில், சுகாதாரம் சார்ந்து, ஊராட்சி நிர்வாகங்களை செம்மைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஊராட்சி நிர்வாகங்கள் மத்தியில் நிறைந்துள்ளது.
இது குறித்து ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறியதாவது:
வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து குப்பையை அகற்றுவது, தரம் பிரித்து உரமாக்குவது, மக்காத குப்பையை உரிய முறையில் மறுசுழற்சி செய்து விற்பனை செய்வது, பிளாஸ்டிக் தடை, திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் தேங்காமல் அகற்றுவது ஆகிய பணிகள் சுகாதாரம் சார்ந்துள்ளன.
தற்போதைய சூழலில், கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகை பெருகிவிட்டது. அதுவும், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகை, பன்மடங்கு பெருகியிருக்கிறது. பெரும்பாலான ஊராட்சிகளில் குறைந்தபட்சம், இரண்டு முதல், ஆறு துாய்மை பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
குப்பைகளை சேகரித்து எடுத்து செல்வதற்கான பேட்டரி வாகனம், ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது; இது, மெச்சத்தகுந்த சாதனை தான் என்ற போதிலும், ஒரு ஊராட்சிக்கு ஒன்றிரண்டு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், ஊராட்சி முழுக்க குப்பையை முழுமையாக அகற்றுவது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது, கடினமான செயல்.
நகர்ப்புறங்களில் மட்டுமே திடக்கிழிவு மேலாண்மை, அது சார்ந்த கட்டமைப்பு, குப்பையை தரம் பிரிக்கும் இயந்திரங்கள் வழங்கப்படுவது, ஒரு சாதனை தான். ஆனால், மாவட்டத்தில், ஊராட்சிகளில் குப்பை கொட்டுவதற்கே இடமில்லை; இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் எந்த வகையிலும் திடமாக இருக்கப்போவதில்லை.
இந்த குறைகளை நிறைவு செய்வதற்கான திட்டம் வகுத்தால், உள்ளாட்சி நிர்வாகங்களின் சாதனை பயணத்தில், மற்றுமொரு மைல் கல்லை எட்டி பிடிக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.