/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீடிக்கும் பணிகள்; நீங்காத குறைகள் என்ன செய்யப்போகிறது மாநகராட்சி?
/
நீடிக்கும் பணிகள்; நீங்காத குறைகள் என்ன செய்யப்போகிறது மாநகராட்சி?
நீடிக்கும் பணிகள்; நீங்காத குறைகள் என்ன செய்யப்போகிறது மாநகராட்சி?
நீடிக்கும் பணிகள்; நீங்காத குறைகள் என்ன செய்யப்போகிறது மாநகராட்சி?
ADDED : டிச 29, 2024 08:07 AM

2024ம் ஆண்டு நாளை மறுநாளுடன் நிறைவுக்கு வருகிறது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகள், இந்தாண்டில் நடைபெற்றாலும், பல்வேறு அடிப்படை வசதி குறைபாடுகள் நீடிப்பதால், மக்கள் ஆதங்கத்தில் உள்ளனர். வரும் 2025ல், அடிப்படை வசதிகள் முறையாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
சாலைகள் சேதம்தீராத சோகம்
இந்தாண்டு மட்டும் பல்வேறு காரணங்களால் சேதமடைந்த ரோடுகள் கணக்கிடப்பட்டு இதுவரை 720 கி.மீ., நீளம் செப்பனிடப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதும் குடிநீர்திட்டம், பாதாள சாக்கடை திட்டம், கேபிள் பதிப்பு போன்ற பணிகளுக்கு குழி தோண்டுவதால் சேதமடையும் ரோடுகள்; குடிநீர் குழாய்கள் உடைப்பு காரணமாக சேதமாகும் இடங்கள் என ஏராளமான இடங்கள் பிரதான பகுதிகளில் கூட உள்ளது.
மாதக்கணக்கில் சரி செய்யப்படாத ரோடுகள் கூட முதல்வர் வருகை, துணை முதல்வர் வருகை போன்ற நாட்களில் ஒரே நாளில், சரி செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்து பல்வேறு தரப்பினர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
24 மணி நேரமும் குடிநீர்திட்டம் எப்போது?
மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தில் நான்காவது குடிநீர் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் தடைபட்டுக் கிடந்த இத்திட்டப் பணிகளை இரவு, பகல் பாராமல் ஒவ்வொன்றாக கடந்து நிறைவேற்றும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் வீட்டுக் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த பொங்கல் பண்டிகையின் போது இத்திட்டம் சோதனை ஓட்டம் நடத்தி, சில பகுதிகளில் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.தற்போது, 62 மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு, 3 - 5 நாள் இடைவெளியில் தற்போது குடிநீர் சப்ளையாகிறது. இத்திட்டத்தில் இன்னும் ஆறு தொட்டிகள் கட்ட வேண்டும்.
வினியோக குழாய் பதிப்பு மற்றும் வீட்டு இணைப்பு வழங்கும் பணி முழுமையாக முடிய வேண்டும். பவானி ஆற்றின் குறுக்கில், தடுப்பணை கட்டும் பணி, 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இது முழுமை பெற்ற பின்னர், நீரேற்று மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தில் மோட்டார்கள் அனைத்தும் முழு வீச்சில் இயங்கி திட்ட அளவு குடிநீர் வர வேண்டும். அதன் பின்பே மாநகராட்சியின் தினசரி குடிநீர் சப்ளை மற்றும் 24 மணி நேர சப்ளை ஆகிய உறுதிகள் நிறைவேறும்.
போதிய மருத்துவர்ஊழியர் இல்லை
நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தில், 3 சுகாதார மையம், 11 துணை மையம், 34 நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவம் மற்றும் சுகாதாரம் பேணும் வகையில், மருத்துவ முகாம்கள், கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும் இவற்றில், போதிய மருத்துவர் உள்ளிட்ட ஊழியர்கள் நியமிக்கப்படாமல் கட்டியும் பயனற்றுக் காணப்படுகிறது. அனைத்துப் பணியிடங்களும் நிரப்பினால் மட்டுமே இவை பயனுள்ளதாக இருக்கும்.
கழிவுநீர் தேக்கம்நீங்காத பிரச்னை
அடுத்த முக்கியமான பிரச்னை என்று பார்த்தால், மழை நாட்களில் தாழ்வான பகுதிகளில் கட்டடங்களுக்குள் மழை நீர் புகுவது பெரும் பிரச்னையாக இருந்தது. இது குறித்து சிறப்பு குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பேரில், பிரச்னைக்குரிய இடங்கள் கண்டறிந்து, 12 இடங்களில், 43 கோடி ரூபாய் செலவில் வடிகால் கட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், பல வார்டுகளில் வடிகாலே கட்டப்படாமலும், சில பகுதிகளில் டிஸ்போஸபிள் பாயின்ட் இல்லாமல், தாழ்வான பகுதி, தனியார் இடங்களில் குளம் போல் கழிவு நீர் தேங்கி நிற்பது தொடர்கிறது. இவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய பாலங்கள்பணி முடியுமா?
நகரப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக நான்கு புதிய பாலங்கள் பணி துவங்கி, ஒரு பாலம் மட்டும் பணி முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிப்பதோடு, நீண்ட காலம் நிலுவையில் உள்ள பாலம் பணிகளும், புதிய பாலங்களும் அமைக்க வேண்டும்.
பாதாளச் சாக்கடைசோதனை வெற்றி
மாநகராட்சி பகுதியில் புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுகிறது. அம்ரூத் திட்டத்தில் மேலும் இரு இடங்களில் சுத்திகரிப்பு மையங்கள் அமைத்து, விடுபட்ட பகுதிகள் அதில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இணைப்புகள் வழங்கும் பணி தாமதமாகிறது.
மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீரை, விவசாயம், தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வழங்கும் நடைமுறை கொண்டு வரவும், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நொய்யல் கரையோரம்மேம்பாடு இழுத்தடிப்பு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் கரை மேம்படுத்தும் வகையில், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கரையோரம் ரோடு அமைக்கும் பணி முழுமை பெறாமல் கிடக்கிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவதில் இழுபறி நீடிக்கிறது. கரையோரம் பொழுது போக்கு அம்சங்கள் அமைத்தல், அழகு படுத்தும் பணிகள், பூங்காக்கள் அமைத்தல் ஆகியன திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு ஒதுக்கிய நிதியில் 'துண்டு' விழுந்த காரணத்தால், இப்பணிக்காக தனியார் நிறுவனங்களை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இருள் மூழ்கிய
வார்டு பகுதிகள்
மாநகராட்சியை ஆட்டிப்படைக்கும் பிரச்னைகளில் குப்பை, மோசமான சாலைகளுக்கு அடுத்தபடியாக தெரு விளக்குகளை குறிப்பிடலாம்.
புதிய தெரு விளக்குகள் அமைத்தல், பழைய டியூப் லைட்கள் எல்.இ.டி., யாக மாற்றுதல், உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்தல் ஆகியன நடந்தாலும் கூட, பல வார்டுகள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. பிரதான ரோடுகளில் கூட விளக்குகள் எரியாமல் இருப்பது தொடர்கதையாக உள்ளது.
நெருக்கடியில் மாநகராட்சி ஆபீஸ்
தற்போது பயன்பாட்டில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகம், தற்போது பெரும் நெருக்கடியில் தான் இயங்குகிறது. தற்போது 60 வார்டுகளாக உள்ள மாநகராட்சி மேலும், சில பகுதிகளை இணைத்து 85 வார்டு களாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இதற்காக புதிய விசாலமான வளாகம் கட்ட, 50 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி விரைந்து துவங்கி முடிக்க வேண்டும்.
- நமது நிருபர் -