sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கொடுஞ்செயல் புரிந்த மாபாதகர்களுக்கு சரியான தண்டனை! தீர்ப்பை வரவேற்ற திருப்பூர்வாசிகள்

/

கொடுஞ்செயல் புரிந்த மாபாதகர்களுக்கு சரியான தண்டனை! தீர்ப்பை வரவேற்ற திருப்பூர்வாசிகள்

கொடுஞ்செயல் புரிந்த மாபாதகர்களுக்கு சரியான தண்டனை! தீர்ப்பை வரவேற்ற திருப்பூர்வாசிகள்

கொடுஞ்செயல் புரிந்த மாபாதகர்களுக்கு சரியான தண்டனை! தீர்ப்பை வரவேற்ற திருப்பூர்வாசிகள்

2


ADDED : மே 14, 2025 06:49 AM

Google News

ADDED : மே 14, 2025 06:49 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த, 2019ம் ஆண்டில், சமூக வலை தளங்களில் பரவிய சில வீடியோக்கள் நம் ஊரிலும் கூட இப்படியெல்லாம் நடக்குமா என்ற அதிர்ச்சியை பல தரப்பினருக்கும் ஏற்படுத்தியது.

சொந்த ஊரைச் சேர்ந்த நட்பாக, யதார்த்தமாக பழகிய இளம்பெண்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி, பலாத்காரம் செய்தும், அதை வீடியோவாக பதிவு செய்து வைத்து, மீண்டும் மீண்டும் அதை வெளியிடுவதாக கூறி மிரட்டி, பணம் பறித்தும், கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்தும் கொடுமைகளை அரங்கேற்றம் செய்தது ஒரு கும்பல்.

ஒருவர் என்று இல்லாமல் ஏராளமான பெண்கள் இதில் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு பெண் தைரியமாக அளித்த புகாரையடுத்து, மேலும் சிலர் புகார் அளித்தனர்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரித்து, கோவை மாவட்ட மகிளா கோர்ட் நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய ஒன்பது பேருக்கும் வாழ்நாள் முழுவதும் ஆயுள் சிறைத் தண்டனை என்ற சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்பு குறித்து திருப்பூர் பகுதியை சேர்ந்த சிலரின் கருத்துகள்:

விழிப்புணர்வு வேண்டும்


ரவி, செயலாளர், கன்ஸ்யூமர் அவேர்னஸ் விங்: இந்த தீர்ப்பு வரவேற்க கூடியது. ஆனால், இது மட்டுமே நம் பெண்களை பாதுகாக்க போதுமானதாக இருக்காது. எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும், பெண் சமுதாயம் விழிப்புணர்வு பெறாத வரை எதுவும் நடக்காது மகளிருக்கு தேவை இது போன்ற தீர்வுகள் மட்டுமில்லை. நம் விருப்பத்தை மீறி எது நடந்தாலும், அதனை வெளியே சொல்ல பயந்தால், அதனையே குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தொடர்ந்து குற்றங்களை செய்ய சந்தர்ப்பத்தை உருவாக்க கூடாது. பெண்கள் குற்றம் நடந்தால் உடனடியாக, போலீசில் புகார் அளிக்க வேண்டும்.

தாமதமில்லாத தீர்ப்பு


சுமதி, பனியன் நிறுவன டெய்லர்: பொள்ளாச்சியில் அப்பாவியான சில அபலை இளம்பெண்கள், கல்லுாரி மாணவியர் சில மனித உருவில் உலவிய மிருகங்களால் பாலியல் ரீதியான கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இது நம் அனைவருக்குமே ஒரு தலைக்குனிவை, அவமானத்தை ஏற்படுத்தியது என்றால் மறுக்க முடியாது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனை என்ற தீர்ப்பு வரவேற்க்க கூடியது. இனிமேலும் இது போன்ற மாபாதகச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஒரு கடும் எச்சரிக்கையாக அமையும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தாமதமில்லாத முறையில் தீர்ப்புகள் வழங்கி, தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டும்.

கடும் தண்டனை


நேதாஜி கண்ணன், சமூக ஆர்வலர்: நம் நாடு பெண்களை தெய்வமாக, நதியாக, நாடாக, மொழியாக உயர்நிலையில் வைத்துக் கொண்டாடுகிறது. இந்த பூமியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை மன்னிக்க முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்.

இது போன்ற கொடூரமான செயல்கள் ஒரு நல்ல குணம் கொண்ட மனிதர்களால் நிச்சயம் செய்யவோ, ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவோ இல்லை. இதில் ஈடுபட்டோர் நிச்சயம், கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பினரின் எண்ணம். விசாரணை அலுவலர்களும், நீதித்துறையும் தங்கள் கடமையை செம்மையாக நிறைவேற்றியுள்ளன.

மிகப்பெரிய பாடம்


ஜமீலா பானு, சிறப்பு அரசு வக்கீல்திருப்பூர் மகிளா கோர்ட்: நமது கொங்கு மண் மரியாதைக்கும், பெண்களை மதிக்கும் குணத்துக்கும் பெயர் பெற்றது. அவ்வாறு இருக்க பொள்ளாச்சியில் நடந்த இந்த சம்பவம் இதனை குலைக்கும் விதமாக மாறியது.

விசாரணை அதிகாரிகளின் நியாயமான, சட்டரீதியான விசாரணை நடவடிக்கைகள், அரசு தரப்பு வாதங்கள் உள்ளிட்டவை காரணமாக இவ்வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனித நேயமற்ற செயலில் ஈடுபட்டு பெண்மையை சூறையாடிய குற்றவாளிகளுக்கு வாழ் நாள் முழுவதும் சிறை என்பது தக்க தண்டனை. பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இந்த தண்டனை மிகப் பெரிய பாடம்.

யாரும் தப்ப முடியாது


சந்திரா, ஒருங்கிணைப்பாளர், 'விழுதுகள்': பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றம் செய்வோர், பாதிப்பை ஏற்படுத்துவோர், சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு சமூகத்தில் மேலும் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பெண்களின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் தொடர்ந்து போராடிவரும் பெண்களுக்கும், அமைப்புகளுக்கும் இத்தீர்ப்பு ஊக்கத்தையும் தைரியத்தையும் அளிக்கிறது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக புகார் செய்து நீதியைப்பெற முடியும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், உரிய நிவாரணமும் வழங்கியிருப்பதன் மூலம் அவர்களுக்கு சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடும் தண்டனை


சரவணக்குமார்,- அவிநாசி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை சொற்பமான அளவில் உள்ளது. பெண்களை பாழ்படுத்தும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பிற நாடுகளில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்குகிறார்கள். அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்.

தெய்வமணி, ரங்கா நகர்: பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவார்கள் என எதிர்பார்த்தேன். ஆயுள் தண்டனை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தீர்ப்பு மனசாட்சி இல்லாத குற்றவாளிகளுக்கு இனிப்பை சுவைப்பது போலத் தான். பெண்கள் மீதான குற்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் சட்டங்களை முதலில் மாற்றி அமைக்க வேண்டும்.

சி.பி.ஐ., 'சூப்பர்' விசாரணை


வக்கீல் அன்புசெல்வி: ஆறு ஆண்டு களாக தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவே உற்று நோக்கி வந்த கூட்டு பாலியல் வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களை தைரியமாக புகாராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இவ்வழக்கில், சி.பி.ஐ., சிறப்பாக விசாரணை நடத்தியுள்ளது. அரசியல் பின்புலம் உள்ள குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கப்பட்டது பெண்களுக்கு பாதுகாப்பு சட்டம், செயல்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

உச்சபட்ச தண்டனை


திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன்: பாலியல் வழக்கில் சாகும்வரை தண்டனை என்பதை காட்டிலும், உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும். மரண தண்டனை வழங்கினால் மட்டும் தான், இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியும். இந்த கொடூர சம்பவத்தில், பின்புலத்தில் இருந்து இயக்கிய நபர்கள் சிக்கவில்லை.

பெண்கள் வேலைக்கு செல்லும் இடத்தில், பயணம் செய்யும் போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இந்த வழக்கில் துாக்கு தண்டனை பெற்று தர, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

நட்பாக பழகி நாசம் செய்த கயவர்கள்

மாதர் சங்க நிர்வாகி ஆவேசம்

திருப்பூர் மாவட்ட இந்திய மாதர் சம்மேளன செயலாளர் நதியா அறிக்கை:

கடந்த, 2019ல், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் உலுக்கியது. இது குறித்து முறையான விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய நபர்கள் கண்டறிந்து சட்டப்படியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்திய மாதர் தேசிய சம்மேளனம், பாதிக்கப்பட்ட பெண்களிடம் புகார் பெற்று, அவர்கள் விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வழக்கு விசாரணை நடக்க வேண்டும் என்று கோரியது.குற்றவாளிகள் எந்த நிலையிலும் தப்பக்கூடாது, சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும் போராட்டங்களையும் நடத்தியது.

இதில் ஈடுபட்டவர்களின் செயல் சிறிதும் கூட கருணையும், கண்ணியமும் இல்லாமல் இருந்தது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை இது காட்டுவதாக இருந்தது. நட்பாக பேசிப் பழகி, நாசம் செய்த கயவர்கள் செயல் கடும் கண்டனத்துக்குரியது. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பும் எதிர்பார்த்தது.இவ்வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு, வழக்கு விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் சிறை என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம்இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் உரிய பாடம் கற்றுக் கொள்வர். இத்தீர்ப்பை மாதர் தேசிய சம்மேளனம் வரவேற்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் நிம்மதியான எதிர்கால வாழ்க்கையை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். அறிவித்துள்ள இழப்பீடு போதது. கூடுதலாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us