/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அருவியில் எச்சரிக்கை கருவி செயல்பட்டு நீண்ட காலமாகிறது! பாதுகாப்பில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்
/
அருவியில் எச்சரிக்கை கருவி செயல்பட்டு நீண்ட காலமாகிறது! பாதுகாப்பில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்
அருவியில் எச்சரிக்கை கருவி செயல்பட்டு நீண்ட காலமாகிறது! பாதுகாப்பில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்
அருவியில் எச்சரிக்கை கருவி செயல்பட்டு நீண்ட காலமாகிறது! பாதுகாப்பில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்
ADDED : ஆக 05, 2025 11:42 PM
உடுமலை,; பஞ்சலிங்க அருவியில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, மக்களை எச்சரித்து, உயிரிழப்புகளை தவிர்க்க, நிறுவப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கருவி நீண்ட காலமாக செயல்படாமல் உள்ளது. சுற்றுலா பயணியரின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மீது அனைத்து தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உடுமலை அருகே திருமூர்த்திமலையில், பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. சமவெளியில் இருந்து, 960 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
அருவிக்கு குழிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள, சிற்றாறுகள் வாயிலாக நீர் வரத்து உள்ளது. கனமழை பெய்யும் போது, அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதை, மலையடிவாரத்தில் கண்டறிந்து, எச்சரிக்கை செய்வது மிக கடினமாகும்.
கடந்த, 2008 மே 25ல், திடீர் வெள்ளப்பெருக்கில், பஞ்சலிங்க அருவியில் குளித்துக்கொண்டிருந்த, 13 பேர் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டு பலியானார்கள்.
உயிரிழப்புகளை தவிர்க்க, நீண்ட இழுபறிக்குப்பிறகு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, 2011ல், அருவியில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டது.
இக்கருவி, நீர்வரத்து அதிகரித்தால், தானியங்கி முறையில் அலாரம் எழுப்பும்; அடிவாரத்திலுள்ள கோவில் அலுவலகத்திற்கும் தகவல் அளிக்கும்.
மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை, வளம் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், நவீன தொழில் நுட்பத்தில், தானியங்கி முறையில், இந்த வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டது.
பல இடங்களில் ஒலி பெருக்கி அமைத்து, கட்டுப்பாட்டு மையத்துக்கும், கோவில் அலுவலகத்திற்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக தகவல் தெரிவிக்கும்.
குருமலை, வால்பாறை பகுதிகளின் வானிலை குறித்த நிலவரமும், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் அலுவலகத்துக்கு கிடைக்கும்.
பாதுகாப்பு கேள்விக்குறி இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுவது, சுற்றுலா பயணியரை வெளியேற்றுவது உள்ளிட்ட பணிகள் எளிதானது. தற்போது இக்கருவி செயல்படுவதில்லை.
வெள்ள அபாய எச்சரிக்கை கருவி செயல்படாததால், மழைக்காலங்களில் சுற்றுலா பயணியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது.
நேற்று முன்தினம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, மலை கிராம மக்கள் அளித்த தகவல் அடிப்படையிலேயே, கோவில் பணியாளர்கள் அருவிக்குச்சென்று, சுற்றுலா பயணியரை வெளியேற்றினர்.
இல்லாவிட்டால், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது கேள்விக்குறியாகி இருக்கும். மழை குறித்து குறித்த நேரத்துக்குள் தகவல் அளிக்க, மலைவாழ் கிராம மக்களும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இப்பணிக்காக அரசு தரப்பில் எவ்வித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை.
முக்கியத்துவம் வாய்ந்த, இந்த கருவியை சீரமைக்க, அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகம் வாயிலாக, ஹிந்து அறநிலையத்துறையினர் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் கடிதம் அளித்து வருகின்றனர்.
குறிப்பாக, கருவியை நிறுவிய மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை, திருப்பூர் கலெக்டர் உள்ளிட்டோருக்கு உடுமலை பகுதி மக்கள் சார்பில், பல முறை கோரிக்கை மனுவும் அனுப்பப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சுற்றுலா பயணியரின் பாதுகாப்பில், அலட்சியம் காட்டி வரும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் இதர துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடவும், உடுமலை பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.