/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நதி செல்லும் வழியை மதி கெட்டவர் பிழையாக்கிய கொடுமை!
/
நதி செல்லும் வழியை மதி கெட்டவர் பிழையாக்கிய கொடுமை!
நதி செல்லும் வழியை மதி கெட்டவர் பிழையாக்கிய கொடுமை!
நதி செல்லும் வழியை மதி கெட்டவர் பிழையாக்கிய கொடுமை!
ADDED : செப் 22, 2024 03:59 AM

'நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவ துண்டோ!' என்ற மகாகாவியின் வரிகள், எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ, திருப்பூரில் ஓடும் நொய்யல் ஆற்றுக்கும், நல்லாற்றுக்கும் மிக நன்றாகவே பொருந்தும்.
மூலிகை செடி, கொடிகள் நிறைந்த கோவை வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகி, துாய நீரை சுமந்து வரும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு என்று மூன்று மாவட்டங்களைக் கடந்து, கரூர் மாவட்டத்தில், 20 கி.மீ., வரை பாய்ந்து, நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியில் கலக்கிறது.
அதேபோல், கோவை மாவட்டம், அன்னுார் பகுதிகளில் பெய்யும் மழை நீர், சிறு சிறு ஓடைகளாக உருவாகி, 'நல்லாறு' என்ற பெயருடன், திருப்பூர் வழியாக பயணித்து, நிறைவாக, 440 ஏக்கர் பரப்பளவுள்ள, நஞ்சராயன் குளத்தை நிரப்பி, மீண்டும் பயணித்து நொய்யலில் சங்கமிக்கிறது.
நொய்யலின் கிளை நதியான கவுசிகா, ஒரு காலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து செழிப்புடன் இருந்த நிலை மாறி, தற்போது கழிவுநீர் செல்லும் பாதையாக மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் கோவையின் வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியின் செழுமைக்குக் காரணமாக இருந்த இந்நதி, தற்போது போதிய மழையில்லாததால், புல், புதர்கள் மண்டி வறண்டு கிடக்கிறது.
நல்லாற்று கரையில் தான் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையான அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது.
அன்னுார், அவிநாசி, திருப்பூர் பகுதியில் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு, இந்த ஆறுகள் பேருதவியாக இருந்தன என்பது, அந்த காலத்து அனுபவமாகிவிட்டது. இந்த ஆறுகளில், பொங்கி வரும் நீரில் குளித்து மகிழ்ந்த காலங்களும் உண்டு என, சிலாகிக்கின்றனர் திருப்பூரின் மூத்த குடிமக்கள் சிலர்.
நல்லாற்றின் அவலம்
நீர் நிலைகளின் மீதான அலட்சியம் காரணமாக, 'நலங்கெட்ட' ஆறாக மாறியிருக்கிறது நல்லாறு. மழையின் போது வெள்ளம் பெருக்கெடுத்தாலும், இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை நொய்யல் ஆறும், கவுசிகா நதியும்.
நொய்யல் ஜீவநதி பாதுகாப்பு சங்கம், நல்லாறு பாதுகாப்பு சங்கம்,கவுசிகா நதி நீர் பாதுகாப்பு சங்கம் என, ஆறு,நதிகளை பாதுகாக்க, மீட்டெடுக்க சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு, அரசின் கவனத்தை ஈர்க்க அவ்வப்போது குரல்எழுப்பப்படுகிறது. ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதே ஆதங்கம்.
தொழில் நகரமாக, வெயில் நகரமாக விளங்கும் திருப்பூரில் பசுமை போர்வையை ஊருக்கு வனத்துக்குள் திருப்பூர், வனம் இந்தியா உள்ளிட்ட பல அமைப்புகள் மரக்கன்று நடும் பணியை, மக்கள் இயக்கமாகவே நடத்தி வருகின்றன.
'துாசும், மாசும் நிறைந்த திருப்பூரை, மாசில்லா நகராக முயற்சி மேற்கொண்டு வருகிறோம்' என்கின்றனர், மாவட்டத்தின் நலன் காக்கும் பணி செய்யும் முன்னோடிகள்.
ஆனால், ஆறு, நதிகள் பாதுகாப்பு என்பது, பேச்சளவில் மட்டுமே இருந்து வருகிறதே தவிர, அதை மீட்டெடுப்பதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் வேகம் எடுத்ததாக தெரியவில்லை. ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்பதற்கேற்ப, தொழில் நகரில் நீர் வளம் பெருக, அரசும் கை கோர்க்க வேண்டும்.
- இன்று (செப்., 22)உலக ஆறுகள் தினம்
நதியைக் காப்பாற்றுவது யார்?
ஆறுகளும், நதிகளும் மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் ஒவ் வொரு ஆண்டும், செப்., மாதம் நான்காவது வாரம், உலக ஆறுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டின் கருப்பொருள், 'நிலையான எதிர்காலத் திற்கான நீர் வழிகள்,' என்பதே. ஒரு நகரின் வளர்ச்சிக்கும், மக்களின் வளமான வாழ்வுக்கும் நீர் வழிகளும், அதை உருவாக்கித் தரும் ஆறுகளும், நதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே யதார்த்தம்.இதனை செய்யப்போவது யார் என்பது 'மில்லியன் டாலர்' கேள்வி?