/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை ஏதுமில்லை! கிராமங்களில் குவிந்தும் அதிகாரிகள் அலட்சியம்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை ஏதுமில்லை! கிராமங்களில் குவிந்தும் அதிகாரிகள் அலட்சியம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை ஏதுமில்லை! கிராமங்களில் குவிந்தும் அதிகாரிகள் அலட்சியம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை ஏதுமில்லை! கிராமங்களில் குவிந்தும் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஏப் 07, 2025 05:05 AM

உடுமலை; உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க, கிராம சபையில் மட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதால், பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், மண் வளமும், நீராதாரங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.
தீர்மானம் போதுமா?
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபை கூட்டங்களில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க, ஒவ்வொரு முறையும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
அதன்படி, ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், உணவை பாதுகாக்கவும், மேசைகள் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட டீ கப் ஆகியவற்றை இருப்பு வைத்தல், வினியோகம், விற்பனை மற்றும் இடம் மாற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. அரசு ஆணையின்படி, பிளாஸ்டிக் இல்லா கிராமமாக உருவாகும் வகையில், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,' என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
மேலும், ஊராட்சியில், செயல்படும், டீக்கடை, பெட்டிக்கடை, சிற்றுண்டி உணவகங்கள், மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகளில், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யாமல் இருக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும், அரசு தரப்பில், ஊரக வளர்ச்சித்துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
ஆனால், நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை செயல்படுத்த, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை; வட்டார சுகாதாரத்துறையினரும் கண்டுகொள்வதில்லை.
இதனால், கிராமங்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டமும் கிராமங்களில் முடங்கியுள்ளதால், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தாமல் திறந்தவெளியில் தீ வைத்து எரிக்கின்றனர்.
குளம் மற்றும் பி.ஏ.பி., கால்வாய்களில் நேரடியாக பிளாஸ்டிக் கழிவுகளை வீசுககின்றனர். மக்கள் மட்டுமல்லாது, கிராமங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை சில ஊராட்சி நிர்வாகத்தினரும் நீராதாரங்களில் கொட்டுவதால், மண் வளம் பாதிக்கிறது; நீர் நிர்வாகத்திலும் குளறுபடிகள் ஏற்படுகிறது.
உடுமலை கால்வாயில் ஒவ்வொரு முறை தண்ணீர் திறப்பின் போதும், மடை ஷட்டர்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து கொண்டு விவசாயிகள் அவற்றை அகற்ற திணறும் நிலை உள்ளது.
மண் மற்றும் நீர் வளத்தை பாதுகாக்க ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு செய்து, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.
நீர்நிலைகளை ஒட்டி, கழிவுகளை கொட்டுவதை தடுக்க, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
இது குறித்து அனைத்து ஒன்றியங்களிலும் பி.டி.ஓ.,க்கள் தலைமையிலான கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிடுவது அவசியமாகும்.

