/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஹீமோபிலியா' நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து தட்டுப்பாடு கூடாது
/
'ஹீமோபிலியா' நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து தட்டுப்பாடு கூடாது
'ஹீமோபிலியா' நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து தட்டுப்பாடு கூடாது
'ஹீமோபிலியா' நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து தட்டுப்பாடு கூடாது
ADDED : ஏப் 18, 2025 06:58 AM
'ஹீமோபிலியா' என்பது மரபணு வழியாக வரக் கூடிய குறைபாடு. வழக்கமாக உடலில் சிறு காயம் ஏற்பட்டால் சில நிமிடங்களில் ரத்தக் கசிவு, பலருக்கு தானாக நின்று விடும். பெரிய காயமாக இருந்தால், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் ரத்தம் நின்று விடும்.
ஆனால், ஹீமோபிலியா குறைபாடு உடையவர்களுக்கு இயற்கையாக ரத்தம் உறையும் தன்மை இருக்காது. உடனடியாக உரிய சிகிச்சை எடுக்காவிடில், உயிருக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வாறு இருப்பவர்களுக்கு மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மூலம் தக்க மருத்துவ ஆலோசனை அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.
'ஹீமோபிலியா'மருத்துவக்குழு
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், 17ம் தேதி உலக ரத்தம் உறையாமை தினம் (ஹீமோபிலியா தினம்) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு மருத்துவக் கல்லுாரிகள், தலைமை அரசு மருத்துவமனைகளில் 'ஹீமோபிலியா' குறித்த கருத்தரங்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஹீமோபிலியாவுக்கு சிகிச்சை அளிக்க தனிடாக்டர் தலைமையில் குழு செயல்படுகிறது. இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் முகாம்கள் நடத்தி, ஹீமோபிலியா குறித்தும், குறைபாடு உடையவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக ஆலோசனை வழங்குகின்றனர்.
விழிப்புணர்வுநிகழ்ச்சி இல்லை
நேற்று, உலக ரத்தம் உறையாமை தினம் (ஹீமோபிலியா தினம்) நிகழ்வுகள் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடக்குமென எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் செய்யவில்லை.
ஹீமோபிலியா குறைபாடுடன், சிகிச்சை பெற்று வருபவர்கள் கூறியதாவது:
நம் மாவட்டத்தில், 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட, 120க்கும் மேற்பட்டோர் ஹீமோபிலியா குறைபாடுக்கு மருந்து, மாத்திரை, சிகிச்சை எடுத்து வருகின்றனர். அவர்கள் குடும்பத்தினரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இணை நோய் உள்ளவர் பலரும் உள்ளனர்.பலருக்கும் இக்குறைபாடு இருப்பது தெரியாமல், தொந்தரவுகள் ஏற்படும் போது தெரிந்து கொள்கின்றனர். ஆண்டிற்கு ஒருமுறை இது போன்ற தினங்களின் போதாவது ஹீமோபிலியா குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
பாதிப்பு உள்ளவர்களுக்கு தேவையான சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, 'பேக்டர் 8' உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் கிடைப்பதை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்யலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தங்களுக்கு உடல் அளவில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு எவ்வித மருத்துவம் பார்ப்பது, டாக்டரை சந்திப்பது, ஆலோசனை பெறுவது என்பது தெரியாமல், பலரும் தடுமாறுகின்றனர். இது போன்ற தினங்களில் முன்கூட்டியே திட்டமிட்டு, குறைபாடு உடையவர்களை அழைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினால், பயனுள்ளதாக இருக்கும்.