/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எங்கள் மீது குப்பை கொட்டுங்க! பல்லடம் கிராமங்களில் பொதுமக்கள் ஆவேசம்; மாநகராட்சி வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டம்
/
எங்கள் மீது குப்பை கொட்டுங்க! பல்லடம் கிராமங்களில் பொதுமக்கள் ஆவேசம்; மாநகராட்சி வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டம்
எங்கள் மீது குப்பை கொட்டுங்க! பல்லடம் கிராமங்களில் பொதுமக்கள் ஆவேசம்; மாநகராட்சி வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டம்
எங்கள் மீது குப்பை கொட்டுங்க! பல்லடம் கிராமங்களில் பொதுமக்கள் ஆவேசம்; மாநகராட்சி வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டம்
ADDED : ஜூலை 28, 2025 10:59 PM

பல்லடம்; 'குட்டைக்குள் இறங்கி நிற்கிறோம். எங்கள் மீது குப்பை கொட்டி செல்லுங்கள்...' என பல்லடம் அருகே, பாறைக்குழிக்குள் குப்பை கொட்ட வந்த திருப்பூர் மாநகராட்சி வாகனங்களை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பயன்பாடற்ற பாறைக்குழிக்குள் திருப்பூர் மாநகராட்சியின் குப்பைகள் கொட்டப்பட்டன. தகவல் அறிந்து வந்த விவசாயிகள், பொதுமக்கள் வாகனங்களை சிறை பிடித்தனர்.
குப்பைகளை திருப்பி எடுத்து செல்லாமல், வாகனங்களை விட மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுநடத்தினர்.
பொதுமக்களின் எதிர்ப்பை மீறி போலீசார் மாநகராட்சி வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். ஆத்திரமடைந்த விவசாயிகள், பொதுமக்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். குப்பைகளை திருப்பி எடுத்துச் செல்லாமல் வாகனங்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறினர்.
'பத்து நாள் குப்பைகள் மாநகராட்சியில் தேங்கி கிடப்பதாகவும், குப்பை அள்ளுவதற்கு காலி வாகனங்கள் இல்லை என்பதால், மூன்று நாள் அவகாசம் வேண்டும்' என, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள், 'நான்கு நாள் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். இது தொடர்பாக எங்களுக்கு கையெழுத்திட்டு கொடுங்கள்,' என்று கூறினர்.
இதனால், பயன்பாடற்ற பாறைக்குழிகள், நீர்நிலைகளில் குப்பைகள் கொட்ட மாட்டோம் என்றும், நான்கு நாட்களுக்குள் இங்குள்ள குப்பைகள் அகற்றப்படும் எனவும் எழுதப்பட்டு அதில் கையொப்பம் பெறப்பட்ட பின் வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.
அப்பகுதியினர் கூறியதாவது:
அனுமதியின்றி இவ்வாறு குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவது நியாயமா? இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் பலரும் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருகிறோம். பாறைக்குழிகளில் குப்பைகளை கொட்டி விவசாயத்தை அடியோடு அழிக்க நினைக்கிறீர்களா? கிடைக்கும் இடங்களில் எல்லாம் தேடிச் சென்று குப்பைகளை கொட்டி வருகிறீர்கள். இது உங்களுக்கே நியாயமாக உள்ளதா? உங்களுக்கும் சேர்த்து தான் நாங்கள் போராடி வருகிறோம். தயவுசெய்து கொட்டிய குப்பைகளை திருப்பி எடுத்துச் சென்று விடுங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இப்படி ஊர் ஊராக சென்று, நீர் நிலையிலும், பாறைக்குழியிலும் குப்பைகளை கொட்டுவது எத்தனை நாட்களுக்கு சாத்தியம். கோடிக்கணக்கான ரூபாய் பட்ஜெட் தாக்கல் செய்யும் மாநகராட்சியால், திடக்கழிவு மேலாண்மைக்கு ஏன் நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியவில்லை
போலீஸ் குவிப்பும் கடும் எதிர்ப்பும்
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், '' நீர் நிலையில் குப்பை கொட்ட கூடாது என்று கோர்ட்டே சொல்லி விட்டது. அதனால், ஊரே சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு, இத்தனை போலீஸ் தேவைதானா? எதற்குமே இல்லாத வகையில், குப்பை கொட்டும் பிரச்னைக்காக, இவ்வளவு போலீசாரை குவித்துள்ளது, கிராம மக்களை மிரட்டுவது போல் உள்ளது. இப்படி மிரட்டியெல்லாம் எங்களை பணிய வைக்க முடியாது,'' என ஆவேசமாக கூறினார்.