ADDED : மார் 18, 2025 11:57 PM

பல்லடம்; திருப்பூர் -- கோவை செல்லும் தனியார் பஸ்கள் சாந்தாமணி மற்றும் ஜி.எம்.டி., ஆகியன, பல்லடம் வழியே இயக்கப்படுகின்றன.
நேற்று முன்தினம், வழக்கம்போல், கோவையில் இருந்து இரவு, 9.00 மணிக்கு மேல் புறப்பட்ட இரண்டு பஸ்களிடையே போட்டாபோட்டி ஏற்பட்டது. இது, பல்லடம் வரை நீடித்தது. இதன் காரணமாக, பல்லடம் பஸ் ஸ்டாண்டில், இரண்டு பஸ் நடத்துனர், ஓட்டுநர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பஸ்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டதில், பஸ்களின் 'சைடு மிரர்' உடைந்தது. இதனால், பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, இரண்டு பஸ் ஊழியர்களும் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு சமரச பேச்சு நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பற்ற சூழல்
திருப்பூர், கோவை மாவட்டங்கள், தொழில் நகரங்களாக இருப்பதாலும், எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் உள்ளதாலும், அரசு தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் என, ஏராளமானோர், தினசரி திருப்பூர் - கோவைக்கு பஸ்களில் பயணிக்கின்றனர்.
இதன் காரணமாக, பயணிகளை ஏற்ற, அரசு தனியார் பஸ்கள் இடையே அடிக்கடி போட்டோ போட்டி ஏற்பட்டு வருகிறது. இதனால், பஸ்கள் அதிவேகத்தில் செல்வதால், பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே, 'டைமிங்' பிரச்னைக்கு, போக்குவரத்து கழக அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.