/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்காளி விலை கடும் சரிவு; பறிக்கவும் ஆளில்லை! வயல்களில் வீணாகும் அவலம்
/
தக்காளி விலை கடும் சரிவு; பறிக்கவும் ஆளில்லை! வயல்களில் வீணாகும் அவலம்
தக்காளி விலை கடும் சரிவு; பறிக்கவும் ஆளில்லை! வயல்களில் வீணாகும் அவலம்
தக்காளி விலை கடும் சரிவு; பறிக்கவும் ஆளில்லை! வயல்களில் வீணாகும் அவலம்
ADDED : செப் 28, 2025 11:43 PM

உடுமலை; உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில், நடப்பு சீசனில் தக்காளி விலை சரிவு, பறிக்க ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், 20 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில், சீதோஷ்ண நிலை மாற்றம், வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மகசூல் பெருமளவு பாதித்தது. இந்நிலையில், தக்காளி விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளது.
உடுமலை மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள மொத்த சந்தைகளில், 14 கிலோ எடை கொண்ட பெட்டி, ரூ.100 முதல், 200 ரூபாய் வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
உரிய விலை கிடைக்காதது மற்றும் பறிப்பு கூலி, போக்குவரத்து கட்டணம் கூட கட்டுபடியாகாததால், விவசாயிகள் செடிகளிலிருந்து தக்காளியை பறிக்காமல், வயல்களிலேயே வீணாகி வருகிறது.
விவசாயிகள் கூறியதாவது: தக்காளி சாகுபடி ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. வழக்கமாக ஏக்கருக்கு, ஆயிரம் பெட்டிகள் வரை மக சூ ல் இருக்கும்.
நடப்பு பருவத்தில், சீதோஷ்ண நிலை மாற்றம், நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணத்தால், 200 முதல், 300 பெட்டிகள் வரை மட்டுமே மகசூல் கிடைக்கிறது.
தக்காளி பறிக்க, பெண் தொழிலாளர்களுக்கு, 350 ரூபாய் கூலி மற்றும் போக்குவரத்து கட்டணம், கமிஷன் என செலவாகும் நிலையில், சந்தையில் ஒரு பெட்டி, ரூ.100 முதல், அதிகபட்சமாக ரூ. 200 வரை விலை கிடைக்கிறது.
நடப்பு பருவத்தில், காய் சிறிதாக உள்ளதால், குறைந்தபட்ச விலையே பெரும்பாலும் கிடைக்கிறது. தற்போது, தக்காளி பறிக்க ஆட்கள் பற்றாக்குறை உள்ளதோடு, விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளதால், பறிக்காமல் வயல்களிலேயே வீணாகிறது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகளவு உள்ள நிலையில், தோட்டக்கலைத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற சாகுபடி, மருந்து, உரம் உள்ளிட்ட தொழில் நுட்பங்களை பரிந்துரை செய்ய வேண்டும்.
அதே போல், வரத்து அதிகரிக்கும் போது, விலை சரிவு ஏற்படுவதை தடுக்க, மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள், விற்பனை வாய்ப்புகளை உருவாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.