/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரி உயர்வுக்கு எதிராக வியாபாரிகள் போர்க்கொடி
/
வரி உயர்வுக்கு எதிராக வியாபாரிகள் போர்க்கொடி
ADDED : டிச 08, 2024 02:54 AM

திருப்பூர்: அனைத்து வரி உயர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்படுமென, திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை தெரிவித்துள்ளது.
மாநகராட்சி சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் வாடகையில், 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது, திருப்பூர் வியாபாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை, அனைத்து சங்கங்களையும் அழைத்து ஆலோசனை நடத்தியது. கடந்த 3ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு சங்கத்தினரும், தொடர் போராட்டம் வாயிலாக, மத்திய, மாநில அரசுகளுக்கு, தொழில் துறையினரின் பாதிப்பை உணர்த்த வேண்டுமென வலியுறுத்தினர்.
இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம், அரிசி வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அயர்ன் மற்றும் பெயின்ட் ஹார்டுவேர் மெர்ச்சென்ட்ஸ் சங்க நிர்வாகி தட்சிணாமூர்த்தி, மளிகை வியாபாரிகள் சங்க நிர்வாகி ஈஸ்வரன், திரை அரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ரவி, ஓட்டல் பேக்கரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி நாகராஜ் உட்பட, வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடைகளின் முன்பாக, தொடர்ந்து 10 நாட்களுக்கு கருப்பு கொடி கட்டுவது என்றும், 18ம் தேதி முழு கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தொழிலுக்கு சிக்கல்
வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் ராமசாமி பேசியதாவது:
கடந்த, 2023ல் சொத்துவரி உயர்த்தப்பட்டதால் பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; கூடுதல் வரிவிதிப்பை தவிர்க்க வேண்டும். ஆண்டுக்கு, 6 சதவீத வரி உயர்வு முடிவை ரத்து செய்ய வேண்டும்.
புதிய கட்டட உரிமம் பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும். மின் கட்டணம் அதிகமாக இருப்பதால், சிறு, குறு வியாபாரிகள் தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பணி நிறைவு சான்றிதழ் கிடைக்காமல், கட்டி முடித்து பல ஆண்டுகளான கட்டடங்களை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
வாடகை பயன்பாட்டில் உள்ள கடைகளுக்கு, ஜி.எஸ்.டி., வரி, 18 சதவீதம் விதித்தால் தொழில் நலிந்துவிடும். வாடகை கடை நடத்துவோரால் வரி உயர்வை தாங்க முடியாது. வியாபார தொழில்கள் அடியோடு பாதிக்கும்; அனைத்து வரி உயர்வுகளையும் ரத்து செய்யக்கோரி, முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்படும்.
திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதிகளை சேர்ந்த அனைத்து வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. முதல்கட்டமாக கருப்புகொடி ஏற்றப்படும். 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். அடுத்த கட்ட போராட்டம் குறித்து பிறகு முடிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
அனைத்து வரி உயர்வுகளையும் ரத்து செய்யக்கோரி, முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்படும். திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதிகளை சேர்ந்த அனைத்து வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. முதல்கட்டமாக கருப்புகொடி கட்டுவது, 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும். அடுத்த கட்ட போராட்டம் குறித்து பிறகு முடிவு செய்யப்படும்.