/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்து மாற்றம் அமல்; மக்கள் ஒத்துழைக்க எதிர்பார்ப்பு
/
போக்குவரத்து மாற்றம் அமல்; மக்கள் ஒத்துழைக்க எதிர்பார்ப்பு
போக்குவரத்து மாற்றம் அமல்; மக்கள் ஒத்துழைக்க எதிர்பார்ப்பு
போக்குவரத்து மாற்றம் அமல்; மக்கள் ஒத்துழைக்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 05, 2025 12:22 AM

திருப்பூர்: திருப்பூர் பார்க் ரோட்டில் சுரங்க பாலம் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு குழப்பத்தால் பழைய முறைக்கு சென்றது. தற்போது நடராஜா தியேட்டர் ரோடு பாலம் திறந்த பின், மீண்டும் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.
திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் ரோடு, பார்க் ரோடு சந்திக்கும் மையப்பகுதியில் சுரங்கபாலம் பணி நடக்கிறது. தற்போது அடுத்த கட்ட பணிக்காக போக்குவரத்து மாற்றத்தை அறிவித்து சில நாட்களுக்கு முன் அமல்படுத்தினர். நடராஜா தியேட்டர் ரோடு புதிய பாலம் திறப்புக்கு முன், மேற்கொள்ளப்பட்ட மாற்றம் காரணமாக குழப்பத்துடன், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாற்றம் செய்த முதல் நாளே, பழைய முறைக்கு மீண்டும் மாற்றத்தை மேற்கொண்டனர். இந்நிலையில், நடராஜா தியேட்டர் ரோடு புதிய பாலத்தை அமைச்சர் சாமிநாதன் நேற்று திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
நடராஜா தியேட்டர் ரோடு புதிய பாலம் திறப்புக்கு பின், சுரங்க பாலம் கட்டுமான பணிக்காக போக்குவரத்து மாற்றம் அமல் செய்யப்பட்டது. குமரன் ரோடு வழியாக வரும் வாகனங்கள் இடது மற்றும் வலது புறம் என, எந்த வழியாக சென்றாலும், வளர்மதி சந்திப்பை அடைந்து, பஸ் ஸ்டாண்ட், மங்கலம் ரோடு செல்லலாம். மாநகராட்சி சந்திப்பில் சிக்னல் மூடப்பட்டது.
எனவே, குமரன் ரோடு வழியாக வரும் மக்கள் குழம்பி கொள்ளாமல், அங்கு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை கவனித்து, தங்கள் தேவையை பொறுத்து, எந்த ரோடு வழியாக செல்லலாம் என்று தேர்வு செய்து கொள்ளலாம். குமரன் ரோட்டில் இருந்து பிரிந்து, எந்த ரோட்டில் சென்றாலும், வளர்மதி சந்திப்பை அடைய முடியும். போக்குவரத்து மாற்றத்தால் ஆங்காங்கே சில இடத்தில் நெரிசல் ஏற்படலாம். அதனை உடனடியாக சரி செய்யும் வகையில், குறிப்பிட்ட இடங்களில் போலீசார் பணியில் இருப்பர். சுரங்க பாலம் பணி, மூன்று முதல், நான்கு மாதம் வரை நடக்கும். எனவே, போக்குவரத்து மாற்றத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

