ADDED : அக் 11, 2025 11:04 PM
திருப்பூர்:தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல, பெரும்பாலானோர், ரயில் போக்குவரத்தையே தேர்வு செய்கின்றனர். மாவட்ட தலைநகராக திருப்பூர் இருந்த போதும், இன்னும் சாதாரண ஸ்டேஷனாகத் தான் செயல்படுகிறது.
தீபாவளிக்கு திருப்பூரில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், மொரப்பூர், பொம்மிடி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சென்னை செல்ல அதிகளவில் ரயில் டிக்கெட் தற்போது வரை முன்பதிவாகியுள்ளது. கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி, கோவை, எழும்பூர் (திருச்சி வழி), இரவு நேர ரயில்களான சேரன், நீலகிரி, சென்னை சூப்பர்பாஸ்ட் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவு, படுக்கை வசதி பெட்டிகள் நிரம்பி விட்டன.
காத்திருப்போர் பட்டியல் ஒவ்வொரு ரயிலுக்கும் 80 - 120 வரை உள்ளது. காத்திருப்போர் பட்டியல், நானுாறை தாண்டவும் வாய்ப்புள்ளது. திருப்பூரில், மூன்று லட்சத்துக்கும் அதிகமாக தென்மாவட்டத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு மதுரை, திருநெல்வேலி நாகர்கோவில் பகுதியை இணைக்க கோவையில் இருந்து காலை ஒரு பாசஞ்சர், இரவு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே உள்ளது.
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் முன்பதிவு முழுமையாக நிரம்பி, காத்திருப்போர் பட்டியல், இருநுாறை கடந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் டிக்கெட் பெற முயற்சிப்போர் எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கும்.கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியில் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும். கோவை - சென்னை இடையே இரவு நேரங்களில் கூடுதல் சிறப்பு ரயில் அறிவிக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பு.