UPDATED : நவ 09, 2026 10:00 PM
ADDED : நவ 09, 2026 01:08 AM
அவிநாசி: அவிநாசி வாரச்சந்தையில் வியாபாரிகளுக்காக ரூ.4.14 கோடியில் கடைகள் கட்டும் பணி 2024ல் தொடங்கியும் இன்னும் நிறைவடையவில்லை. இதனால் 40க்கும் மேற்பட்ட கடைகள் ஈரோடு ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் இந்த சந்தையில் 275க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைக்கின்றனர். போதிய இடவசதி இல்லாததால் வியாபாரிகள், பொதுமக்களின் வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. அருகிலுள்ள தனியார் நிறுவனத்தின் தொழிலாளர் வாகனங்களும் அங்கு நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகளுக்கும் வேன் டிரைவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
உயிர் பயம்
சாலையோரத்தில் கடை அமைத்து உயிர் பயத்துடன் வியாபாரம் செய்து வருகிறோம். அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. கடைகள் கட்டும் பணியை விரைந்து முடித்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். தனியார் வாகனங்களை அப்புறப்படுத்துவதுடன், கழிவறை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
- வியாபாரிகள்.
