/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம சபையில் இரு தரப்பினர் வாக்குவாதம்: ஊராட்சியில் பரபரப்பு
/
கிராம சபையில் இரு தரப்பினர் வாக்குவாதம்: ஊராட்சியில் பரபரப்பு
கிராம சபையில் இரு தரப்பினர் வாக்குவாதம்: ஊராட்சியில் பரபரப்பு
கிராம சபையில் இரு தரப்பினர் வாக்குவாதம்: ஊராட்சியில் பரபரப்பு
ADDED : ஜன 26, 2025 11:16 PM

உடுமலை, ;உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி கிராமசபையில் நகராட்சியுடன் இணைக்க வலியுறுத்தியும், எதிர்ப்பு தெரிவித்தும் என இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலதி, ஊராட்சி செயலர் கலா முன்னிலையில் நடந்தது.
இதில், உடுமலை நகராட்சிக்கு மிக அருகிலும், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், ஐ.டி.ஐ., மாணவ, மாணவியர் விடுதி என அரசு அலுவலகங்கள், மின் மயானம் என, நகராட்சியின் மூன்று எல்லையாக உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியை இணைக்க வேண்டும், என ஒரு தரப்பினர் வலியுறுத்தி மனு அளித்தனர்.
அம்மனுவில், 'உடுமலை நகராட்சிக்கு மிக அருகில், வளர்ச்சியடைந்து வரும் நகரப்பகுதியாக உள்ளது. ஊராட்சியில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், அடிப்படை வசதிகளான, குடிநீர், ரோடு, சாக்கடை, தெரு விளக்கு மற்றும் பொது சுகாதாரம் பராமரிக்க முடியாமல், பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, நகராட்சியுடன் இணைக்க வேண்டும்,' என ஒவ்வொருவரும் தனித்தனியாக மனு அளித்தனர். இதற்கு, மற்றொரு தரப்பினர், வரி உயர்வு, நுாறு நாள் வேலை பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், கூட்டத்தில் இரு தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமயிலான போலீசார் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர். இருப்பினும், வாக்குவாதம் முற்றியதால், ஒன்றிய அதிகாரிகள் கூட்டம் நிறைவடைந்தது, கோரிக்கைகள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும், என கூறி, கூட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பினர்.
இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள், ஒன்றிய அலுவலகத்தில் திரண்டனர். அவர்களிடம், பி.டி.ஓ., சிவகுருநாதன், பி.டி.ஓ., ஊராட்சி சுரேஷ்குமார் ஆகியோர் பேச்சு நடத்தினர். அதில், மனுக்கள் முறைப்படி பதிவு செய்து, மாவட்ட கலெக்டர் மற்றும் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், நகராட்சியுடன் இணைக்கக்கோரி, 474 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், இணைக்கக்கூடாது என, 16 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், இரு தீர்மானங்களையும் கூட்ட மினிட் நோட்டில் அதிகாரிகள் பதிவேற்றம் செய்தனர். இதனால், கணக்கம்பாளையம் கிராம சபை கூட்டம் நடந்த பகுதியில். பரபரப்பு ஏற்பட்டது.
பெரிய கோட்டை
பெரிய கோட்டை ஊராட்சியில் நடந்த கிராம சபையில், நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள ஊராட்சியை இணைக்காமல், பெரியகோட்டை ஊராட்சியை மட்டும் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, அதிகளவு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இருவர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.